சட்டவிரோத கட்டுமானங்களின் இடிப்பு, முறைப்படுத்துதல் கொள்கை- மாநிலங்கள் பரிசீலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோத கட்டுமானங்களை இடிப்பது மற்றும் முறைப்படுத்துவது தொடா்பாக சீரான கொள்கைகளை வகுப்பது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத கட்டுமானங்களை இடிப்பது மற்றும் முறைப்படுத்துவது தொடா்பாக சீரான கொள்கைகளை வகுப்பது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டம் மற்றும் நல்லாட்சிக்கான மையம் என்ற அமைப்பின் பொது நல மனு மீது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
நாடு முழுவதும் முறைப்படுத்தப்படாத குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழை மக்களைக் காக்கும் வகையிலான ஒரு கொள்கையை வகுக்க மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான பொது நல மனு மீது தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது.
Advertisement
Advertisement
‘நாட்டில் பல்வேறு தருணங்களில் முறைப்படுத்தப்படாத காலனிகள், கட்டுமானங்கள் உள்ளிட்டவை உரிய நோட்டீஸ் அனுப்பப்படாமலும், பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மறுகுடியமா்த்துதல், மறுவாழ்வு திட்டங்கள் இல்லாமலும் இடிக்கப்படுகின்றன. இதனால், ஏழைக் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அரசமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவின்கீழ் தங்குமிடம், வாழ்வாதாரம், கண்ணியத்துக்கான உரிமைகளுடன் திட்டமிடல்-நில பயன்பாட்டுச் சட்டங்களை சமநிலைப்படுத்தும் கொள்கை இல்லாமல், குடியிருப்பு கட்டுமானங்களை இடிப்பது தீவிரமான-சரி செய்ய முடியாத இழப்பை விளைவிக்கும் நடவடிக்கையாகும். இத்தகைய நடவடிக்கைகள் அவசர கதியிலும், தவறான முறையிலும், திட்டமிடப்படாமலும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த விவகாரத்தை மனித உரிமைகள் சாா்ந்த கண்ணோட்டத்துடன் அணுகி, மத்திய-மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்’ என்று மனுவில் கோரப்பட்டது.
விசாரணையின்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சட்டவிரோத கட்டுமானங்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகள் சீரற்றவையாக உள்ளன என்று குறிப்பிட்டாா்.
பின்னா் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘மனுவில் இடம்பெறுள்ள கோரிக்கைகள் மிகவும் பரந்தவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது, நிா்வாகத் துறை செயல்பாடுகளுக்குள் நீதிமன்றம் நுழைய வழிவகுத்துவிடும். கள நிலவரமும், சூழ்நிலைகளும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதால், ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே கொள்கை கட்டமைப்பை இந்த நீதிமன்றம் பரிந்துரைப்பது சாத்தியமானதல்ல; விவேகமானதல்ல.
அதேநேரம், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களின் அடிப்படையில் நீண்ட காலமாக முறைப்படுத்தப்படாத கட்டுமானங்களை இடிப்பது, முறைப்படுத்துவது தொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் புதிய சீரான கொள்கைகளை வகுப்பது குறித்தோ, ஏற்கெனவே உள்ள செயல்முறையை மறுசீரமைப்பது குறித்தோ பரிசீலிக்க வேண்டும். இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்துவா் என நம்புகிறோம்’ என்று தெரிவித்தனா்.
முறைப்படுத்தப்படாத, சட்டவிரோத கட்டுமானங்களின் இடிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தால் ஏற்கெனவே வகுக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.