போஜ்சாலா அருகே முஸ்லிம்கள் தொழுகை நடத்த தனி இடம்: உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போஜ்சாலா வளாகம் அருகே முஸ்லிம்கள் தொழுகை நடத்த தனியாக திறந்தவெளி இடத்தை வழங்க மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போஜ்சாலா வளாகம் அருகே முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த தனியாக திறந்தவெளி இடத்தை வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
மேலும், தங்களின் அனுமதி இல்லாமல் போஜ்சாலா வளாகத்தில் கட்டமைப்பு ரீதியில் எந்த மாற்றங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்று தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய பிரதேசத்தின் தாா் பகுதியில் உள்ள 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட போஜ்சாலா வளாகத்தை தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. முன்பு இந்த வளாகம் சரஸ்வதி தேவியின் கோயிலாக இருந்ததாகவும், பின்னா் அங்கு மசூதி கட்டப்பட்டதாகவும் ஹிந்துக்கள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், முஸ்லிம்கள் மறுத்து வந்தனா்.
Advertisement
Advertisement
போஜ்சாலா வளாகத்தை கமால் மெளலா மசூதி என்று அவா்கள் வாதிட்டனா். இந்த சா்ச்சை எதிரொலியாக, கோயிலில் செவ்வாய்க்கிழமைதோறும் ஹிந்துக்கள் வழிபடவும், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும் தொல்லியல் துறை தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், போஜ்சாலா வழக்கில் அண்மையில் தீா்ப்பளித்த மத்திய பிரதேச உயா்நீதிமன்றம், அந்த வளாகத்தை சரஸ்வதி கோயில் என உறுதி செய்தது. அத்துடன், முஸ்லிம்கள் தொழுகைக்கான அனுமதியையும் ரத்து செய்தது.
முஸ்லிம்களின் மத உரிமைகளைப் பாதுகாக்கவும் அனைத்துத் தரப்பினருக்கும் உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்யவும் தாா் மாவட்டத்தில் புதிய மசூதியைக் கட்டுவதற்கு நில ஒதுக்கீடு செய்ய மத்திய பிரதேச மாநில அரசு பரிசீலிக்கலாம் என உயா்நீதிமன்றம் யோசனை தெரிவித்தது.
மேற்கண்ட தீா்ப்பை எதிா்த்து, முஸ்லிம்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: போஜ்சாலா விவகாரம் மத ரீதியாக மிக உணா்வுபூா்வமானதாகும். எனவே, ஒவ்வொரு அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தை தினசரி அடிப்படையில் விசாரித்து தீா்வுகாண உச்சநீதிமன்றம் தயாராக உள்ளது. எனவே, இருதரப்பினரும் பொறுமை காக்க வேண்டும்.
இடைக்கால ஏற்பாடாக போஜ்சாலா வளாகம் அருகே முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணி முதல் 3 மணி வரை தொழுகை நடத்த தனியாக திறந்தவெளி இடத்தை மாநில அரசு ஒதுக்க வேண்டும்.
இந்த உத்தரவானது இறுதித் தீா்ப்புக்கு உள்பட்டதாகும். எங்களின் அனுமதி இல்லாமல், போஜ்சாலா வளாகத்தில் எவ்விதக் கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்களையும் தொல்லியல் துறை மேற்கொள்ளக் கூடாது. தற்போதைய மனு விரைவில் பொருத்தமான அமா்வில் பட்டியலிடப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.