நாடாளுமன்ற சட்ட துணை விதிகள் குழு மறுசீரமைப்பு: ஆ. ராசா, கார்த்தி சிதம்பரம் உறுப்பினர்களாக நியமனம்
நாடாளுமன்ற சட்ட துணை விதிகள் குழு மறுசீரமைப்பு செய்தது தொடர்பாக.....
நமது சிறப்பு நிருபர்
நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்களை அமல்படுத்துவதற்காக உருவாக்கப்படும் துணை விதிகள் குழுவை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மறுசீரமைத்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவைச் செயலகத்தின் ஆகஸ்ட் 17-ஆம் தேதியிட்ட செய்திக்குறிப்பின்படி, "துணை விதிகளுக்கான நாடாளுமன்ற குழுவின்' புதிய தலைவராக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி ஜனசேனை கட்சி எம்.பி. வல்லபனேனி பாலஷெளரி நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
முக்கிய உறுப்பினர்கள்: பல்வேறு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், திமுக எம்.பி. ஆ. ராசா குழுவில் இடம்பெற்றுள்ளனர். மேலும், நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக அவைக்குள் கடுமையாக குரல் கொடுப்பவர்களாக அறியப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா (திரிணமூல் காங்கிரஸ்), கேரளத்தைச் சேர்ந்த என்.கே. பிரேமச்சந்திரன் (புரட்சிகர சோசலிச கட்சி), பிகாரைச் சேர்ந்த முகமது ஜாவேத் (காங்கிரஸ்) ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆளும் கட்சியான பாஜக சார்பில் தெலங்கானாவை சேர்ந்த மேதக் தொகுதி எம்.பி. மாதவனேனி ரகுநந்தன் ராவ், பிகாரைச் சேர்ந்த நவேடா தொகுதி எம்.பி. விவேக் தாக்குர் ஆகியோரும், கூட்டணி கட்சிகள் சார்பில் ஆந்திரத்தில் தெலுங்கு தேசம், பிகாரில் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி (ராம் விலாஸ் பாஸ்வான்), எதிர்க்கட்சியான சமாஜவாதி கட்சி ஆகியவற்றில் இருந்து தலா ஒருவரும் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவருடன் சேர்த்து மொத்தம் 15 பேர் இடம்பெற வேண்டிய இக்குழுவில் மூன்று இடங்கள் காலியாக உள்ளன.
குழுவின் பணி: நாடாளுமன்றத்தின் மிக முக்கியமான குழுக்களில் துணை விதிகள் குழுவும் ஒன்று. நாடாளுமன்றத்தால் சட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்கள் அல்லது அரசமைப்பால் வழங்கப்பட்ட அதிகாரங்களின் வரம்புக்குள்பட்டே மத்திய அமைச்சகங்கள் விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் துணை விதிகளை உருவாக்குகின்றனவா என்பதை விரிவாக ஆய்வு செய்து மக்களவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதே இக்குழுவின் முதன்மை நோக்கமாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.