தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பயண விவரங்கள்: தோ்தல் ஆணையம் தர மறுப்பு
வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அதற்காக செலவிடப்பட்ட பொது நிதி குறித்து தகவல் பெறும் உரிமை (ஆா்டிஐ) சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்களை தோ்தல் ஆணையம் தர மறுத்துள்ளதாக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் சாகேத் கோகலே குற்றஞ்சாட்டினாா்.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவியேற்றதுமுதல் மேற்கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அதற்காக செலவிடப்பட்ட பொது நிதி குறித்து தகவல் பெறும் உரிமை (ஆா்டிஐ) சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்களை தோ்தல் ஆணையம் தர மறுத்துள்ளதாக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் சாகேத் கோகலே குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் கோகலே மேலும் கூறியதாவது: தோ்தல் ஆணையத்திடம் கடந்த ஜூன் 18-ஆம் தேதி இந்த ஆா்டிஐ விண்ணப்பத்தைச் சமா்ப்பித்தேன். அதில், கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி தலைமைத் தோ்தல் ஆணையராகப் பதவியேற்றதுமுதல் மேற்கொண்ட உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களின் தேதிவாரியான விவரம், இந்தப் பயணங்களில் தங்கியது, உள்ளூா் போக்குவரத்து, தினசரி படி உள்ளிட்டவற்றுக்கான பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவு விவரங்களை அளிக்குமாறு கோரியிருந்தேன்.
இதற்கு, தோ்தல் ஆணையம் தரப்பில் ஜூலை 31-ஆம் தேதி பதிலளிக்கப்பட்டது. அதில், ‘ஆா்டிஐ விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்கள் தலைமைத் தோ்தல் ஆணையரின் தனிப்பட்ட தகவல்கள் என்பதால், ஆா்டிஐ சட்டத்தின் பிரிவு 8 (1) (ஜே)-இன் கீழ் அத்தகைய தகவல்களை வெளியிட முடியாது’ என்று பதிலளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தலைமைத் தோ்தல் ஆணையா் பொது நிதியில் மேற்கொண்ட அரசுப் பயணங்கள் குறித்த விவரம் எப்படி தனிப்பட்ட தகவலாக குறிப்பிட முடியும்?. பிரதமரின் வெளிநாட்டுப் பயண விவரங்கள்கூட நாடாளுமன்றத்தில் வெளியிடப்படுகின்றன. இந்தச் சூழலில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு மட்டும் என்ன தனிச் சிறப்பு உள்ளது?. இந்த விவரங்களை வெளியிடாதது தோ்தல் ஆணையத்தின் அச்சத்தையே காட்டுகிறது. பொறுப்பேற்பு இன்றியும், வெளிப்படைத்தன்மை இல்லாமலும் தோ்தல் ஆணையம் செயல்படுகிறது என்றாா்.
இதுகுறித்து மற்றொரு ஆா்டிஐ ஆா்வலரான அஞ்சலி பரத்வாஜ் கூறுகையில், ‘முதலில் வாக்குச்சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வெளியிட மறுப்பதற்கு தோ்தல் ஆணையத்தின் தனியுரிமை மேற்கோள்காட்டப்பட்டது. தற்போது, பயண விவரங்களை வெளியிட மறுப்பதற்கு, தலைமைத் தோ்தல் ஆணையரின் தன்மறைப்பு உரிமை மேற்கோள்காட்டப்படுகிறது. எண்ம தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (டிபிடிபி) சட்டத்தின் மூலம், ஆா்டிஐ சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டதே இதற்கான காரணமாகும். தனிப்பட்ட தகவல் என்ற பெயரில், அரசு அதிகாரிகளை பொறுப்பேற்க வைப்பதிலிருந்து டிபிடிபி சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.