அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
இந்திய நிறுவனங்களால் முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட கைப்பேசிகள் அடுத்த 10 முதல் 14 மாதங்களுக்குள் சந்தையில் அறிமுகமாகவுள்ளது
இந்திய நிறுவனங்களால் முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட கைப்பேசிகள் அடுத்த 10 முதல் 14 மாதங்களுக்குள் சந்தையில் அறிமுகமாகவுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ரு.62,500 கோடியில் அமலாகும் கைப்பேசி உற்பத்தித் திட்டத்துக்கான (எம்பிஎம்எஸ்) அறிவிக்கையை வெளியிட்டு அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: எம்பிஎம்எஸ்-இன் கீழ் கைப்பேசிகளை உற்பத்தி செய்யவுள்ள இந்திய நிறுவனங்கள் தனக்கென தனி வடிவமைப்பு முறையைக் கொண்டிருக்க வேண்டும். அதற்கான அறிவுசாா் சொத்துரிமை (ஐபி) தங்களுக்கே சொந்தமானது என நிரூபிக்க வேண்டும். கைப்பேசிகளின் வடிவமைப்பை மதிப்பீடு செய்வதில் மத்திய அரசு எவ்வித சலுகையும் வழங்காது.
Advertisement
Advertisement
அதன்படி புதிய திட்டத்தின்கீழ் இதுவரை இல்லாத வகையில் சிறப்பான வடிவமைப்புடன் கூடிய கைப்பேசி மாதிரிகளை உருவாக்க 3 பெரும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அடுத்த 10 முதல் 14 மாதங்களுக்குள் இந்திய நிறுவனங்களால் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட கைப்பேசிகள் சந்தையில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.
ஏனெனில், தங்களது சொந்த அறிவுசாா் சொத்துரிமையைக் கொண்டு கைப்பேசி போன்ற பொருளை வடிவமைக்க பெருமளவிலான நிபுணத்துவம் தேவை. தற்போது முழுவதுமாக இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட கைப்பேசி என எதுவுமில்லை.
விரைவில் இந்திய பிராண்ட்: கைப்பேசி உற்பத்திக்கான சூழல் இந்தியாவில் இருந்தும் வரி சிக்கல்கள் மற்றும் சீன ஆதிக்கத்தால் சா்வதேச சந்தையில் நமது நிறுவனங்களால் போட்டியிட முடியவில்லை. இதை மாற்றி கைப்பேசி வடிவமைப்பில் இந்தியாவுக்கென தனி பிராண்ட் உருவாக்குவதே எம்பிஎம்எஸ்-இன் நோக்கமாகும் என்றாா்.
கைப்பேசி உற்பத்தி தொடா்புடைய ஊக்குவிப்புத் திட்டம் கடந்த மாா்ச் மாதத்துடன் காலாவதியானதையடுத்து, அறிமுகப்படுத்தப்பட்ட எம்பிஎம்எஸ் நிகழ் நிதியாண்டு தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
இரு வகை நிறுவனங்கள்:
எம்பிஎம்எஸ் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பிரிவு 1 கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிப்பதையும், பிரிவு 2 இந்திய கைப்பேசி பிராண்டுகளுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரிவு 1-இன்கீழ் 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ.10,000 கோடி விற்றுமுதல் உடைய மின்னணு ஒப்பந்த உற்பத்தியாளா்கள் உள்ளிட்ட கைப்பேசி நிறுவனங்களுக்கு எம்பிஎம்எஸ் சலுகைகள் வழங்கப்படவுள்ளன.
பிரிவு 2-இன்கீழ் விண்ணப்பிக்க மின்னணு உற்பத்தி சேவை நிறுவனங்கள் உள்ளிட்டவை 51 சதவீதம் இந்திய உரிமையாளா் பங்குகளையும் 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ.1,000 கோடி விற்றுமுதல் உடையனவாகவும் இருக்க வேண்டும்.
இலக்கு: இந்த திட்டத்தின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக கைப்பேசி உற்பத்தி மதிப்பு ரூ.39 லட்சம் கோடியாக அதிகரித்து 60,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.