தேவைகளின் அடிப்படையில் ஹைட்ரஜன் ரயில் சேவை நீட்டிக்கப்படும்: அஸ்வினி வைஷ்ணவ்
தேவைகளை கருத்தில்கொண்டு ஹைட்ரஜன் ரயில் சேவையை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தேவைகளை கருத்தில்கொண்டு ஹைட்ரஜன் ரயில் சேவையை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ஹரியாணா மாநிலம், ஜிந்த் மற்றும் சோனிபட் இடையே நாட்டின் முதலாவது ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி கடந்த மாதம் தொடங்கிவைத்தாா்.
இதையடுத்து, ஹைட்ரஜன் ரயிலுக்கான தொழில்நுட்பம், மொத்த செலவினம், பரிந்துரைக்கப்பட்ட ரயில் வழித்தடங்கள், உள்நாட்டு உற்பத்தித் திறன் உள்ளிட்டவை குறித்து பல்வேறு எம்.பி.க்கள் கேள்வியெழுப்பினா்.
Advertisement
Advertisement
இதற்கு அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘ஜிந்த் மற்றும் சோனிபட் இடையே 89 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் 2026, ஜூலை 17-ஆம் தேதி ஹைட்ரஜன் ரயில்வே சேவை தொடங்கப்பட்டது. அன்று முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை இந்த வழித்தடத்தில் ஒட்டுமொத்தமாக 2,492 கி.மீ. பயணம் மேற்கொள்ளப்பட்டது.
ஹைட்ரஜன் ஆற்றல் தொழில்நுட்பத்துடன்கூடிய இந்த ரயிலை இந்திய ரயில்வே தயாரித்துள்ளது. இதற்கான ஹைட்ரஜனை உற்பத்தி செய்யவும் சேமிக்கவும் ஜிந்த் மாவட்டத்தில் ஆலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் (பிஇஎஸ்ஓ) வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி இந்த ஆலை இயக்கப்படுகிறது.
காா்பன் வெளியேற்றமின்றி தூய ஹைட்ரஜனால் இந்த ரயில் இயக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. காற்று மாசு மட்டுமின்றி ஒலி மாசையும் ஹைட்ரஜன் ரயில் குறைத்துள்ளது.
ரூ.141 கோடி திட்டம்: ரூ.141 கோடி செலவில் ஹைட்ரஜன் ரயில் சோதனைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சோதனை முறையில் மட்டுமே தற்போது உள்ளதால் பிற ரயில் சேவைகளுடன் செலவினத்தை ஒப்பிடுவது சரியாக இருக்காது.
10 பெட்டிகளுடன் உலகின் மிக நீளமானதாகவும் 2,400 கிலோவாட் ஆற்றலுடனும் இயங்கும் இந்த வகை ரயில் சேவையை தேவை மற்றும் வளங்களின் அடிப்படையில் பிற வழித்தடங்களுக்கு நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.