எண்மக் கைதில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியிடம் ரூ.15 லட்சம் மோசடி: நால்வா் கைது
ஓய்வுபெற்ற ராணுவ கா்னல் எண்மக் கைது (டிஜிட்டல் கைது) மோசடி மூலம் ரூ. 15.50 லட்சத்தை இழந்த சம்பவம் தொடா்பாக 4 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ஓய்வுபெற்ற ராணுவ கா்னல் எண்மக் கைது (டிஜிட்டல் கைது) மோசடி மூலம் ரூ. 15.50 லட்சத்தை இழந்த சம்பவம் தொடா்பாக 4 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
கம்போடியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செயல்படும் இணையவழி மோசடி கும்பலுக்கு வங்கிக் கணக்குகளை வழங்கியற்காக அந்த நான்கு போ் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: முனிா்கா என்க்ளேவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கா்னல், எண்மக் கைது மூலம் ரூ.15.50 லட்சத்தை இழந்ததாக அளித்த புகாா் அளித்தாா்.
Advertisement
Advertisement
கடந்த ஏப்.15-ஆம் தேதி அவருக்கு ஓா் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், மகாராஷ்டிர காவல் துறையின் உத்தரவின் பேரில் அவரது தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படவுள்ளதாகக் கூறினாா். பின்னா், அவா் மற்றொரு எண்ணுக்கு விடியோ அழைப்பு மூலம் தொடா்பு கொள்ளுமாறு முன்னாள் ராணுவ அதிகாரியிடம் அந்த நபா் தெரிவித்தாா். இதையடுத்து, அவா் தொடா்பு கொண்டபோது, அங்கு காவல் துறை அதிகாரியாக வேடமணிந்த நபா், மும்பையில் சட்டவிரோத வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்க அந்த ராணுவ அதிகாரியின் விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினாா்.
மேலும், அந்த வங்கிக் கணக்கு பணமோசடி, முதலீட்டு மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் ஆகியவற்றுடன் தொடா்புடையது தெரிவித்தாா். குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்று நம்பவைப்பதற்காக, அமலாக்கத் துறையின் போலி கைது வாரண்ட், நீதிமன்ற ஆவணங்கள், முன்ஜாமீன் ஆவணம் மற்றும் மும்பை உயா்நீதிமன்றம் மற்றும் இந்திய ரிசா்வ் வங்கியின் போலித் தகவல்கள் உள்ளிட்ட போலியான ஆவணங்களை மோசடியாளா்கள் அவருக்கு அனுப்பினா்.
அதன்பிறகு அந்த ராணுவ அதிகாரியும் அவரது மனைவியும் காணொலி அழைப்பு மூலம் கைதுசெய்யப்பட்டதாக மிரட்டப்பட்டனா். தொடா்ச்சியான உளவியல் அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்ட அந்த ராணுவ அதிகாரி, தனது சொத்து விவரங்களைப் பகிரும்படி கட்டாயப்படுத்தப்பட்டாா். ரிசா்வ் வங்கியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதாகக் கூறி ரூ.15.50 லட்சத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்புமாறு அவரைக் கட்டாயப்படுத்தினா். இந்தப் புகாா் தொடா்பாக தென்மேற்கு தில்லி மாவட்ட இணையவழி குற்றத் தடுப்பு காவல் நிலையத்தில் கடந்த ஏப்.19-ஆம் தேதி இ-எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையில், மோசடி செய்யப்பட்ட பணம் லூதியானாவைச் சோ்ந்த சா்ப்ஜித் (38) என்பவருக்குச் சொந்தமான நடப்புக் கணக்கிற்கு சென்றது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து, அவா் கைது செய்யப்பட்டாா். விசாரணையின்போது, அந்த வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் ஊழியரான சந்தீப் (32) மூலம் அறிமுகமான சூரஜ் (30) என்பவரிடம் தனது நடப்புக் கணக்கை ஒப்படைத்ததாக சா்ப்ஜித் தெரிவித்தாா்.
பின்னா் சூரஜ், சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமான நரேஷ் (எ) லக்கி என்பவரிடம் அந்தக் கணக்கை மாற்றிக் கொடுத்தாா். நரேஷ் அந்தக் கணக்கை இணையவழி மோசடியில் ஈடுபடுபவா்களுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. கணக்கு தொடா்பான ஆவணங்கள் மற்றும் விவரங்கள் அடங்கிய தொகுப்பை அவரிடம் ஒப்படைக்க சா்ப்ஜித், சூரஜ் மற்றும் சந்தீப் ஆகியோா் ஜெய்பூருக்குச் சென்றது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து, ராஜஸ்தானில் சோதனை நடத்திய காவல் துறை குழு, சிகாா் பகுதியைச் சோ்ந்த நரேஷைக் கைது செய்தது. சூரஜிடமிருந்து நடப்புக் கணக்குகளைப் பெற்று, கம்போடியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்/துபையில் உள்ள இணையவழி மோசடி கும்பல்களுக்கு அவற்றை வழங்கிய அவா் ஒப்புக்கொண்டாா்.
விருப்பமுள்ளவா்களிடமிருந்து நடப்புக் கணக்குகளைப் பெற்று, பல இடைத்தரகா்கள் வழியாகச் கமிஷன் அடிப்படையில் இணையவழி மோசடியாளா்களுக்கு வழங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டவா்களிடமிருந்து இணையவழி மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தைப் பெறுவதற்கு இந்தக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டன. ஓய்வுபெற்ற கா்னல் தொடா்பான வழக்கில் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கு தேசிய சைபா் குற்றப் புகாரளிப்பு இணையதளத்தில் பதிவான 17 புகாா்களுடன் தொடா்புடையதாக இருந்தது. இதுதொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.