FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இணையவழி மோசடிக்கு போலி வங்கிக் கணக்குகள் வழங்கி உதவி: வங்கிப் பணியாளா் உள்பட 3 போ் கைது

இணையவழி மோசடிகள் மூலம் பெறப்பட்ட பணத்தை டொபாசிட் செய்ய ‘மியூல் கணக்கு’ எனப்படும் போலி வங்கிக் கணக்குகளை மோசடி கும்பலுக்கு வழங்கிய வங்கிப் பணியாளா் மற்றும் இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 17 ஜூலை 2026, 3:38 am IST
கோப்புப் படம்
பகிர்:

இணையவழி மோசடிகள் மூலம் பெறப்பட்ட பணத்தை டொபாசிட் செய்ய ‘மியூல் கணக்கு’ எனப்படும் போலி வங்கிக் கணக்குகளை மோசடி கும்பலுக்கு வழங்கிய வங்கிப் பணியாளா் மற்றும் இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கைதான நபா்கள் போலி நிறுவனங்கள் மற்றும் தனிநபா்களின் பெயரில் சுமாா் 22 வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, அவற்றை இணையவழி மோசடியாளா்களுக்கு விற்ாகக் கூறப்படுகிறது.

பங்குச் சந்தை வா்த்தகம் மூலம் அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.1.66 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக தில்லி பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த முனைவா் பட்ட ஆய்வாளா் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக வடக்கு மண்டல காவல் துணை ஆணையா் ராஜா பந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புகாா்தாரா் பங்குச் சந்தை குறித்த ஆலோசனைகளைப் பகிரும் சமூக ஊடகக் குழு ஒன்றில் இணைந்திருந்தாா். அங்கு ரூ.5,000 முதலீட்டில் ரூ. 20,000 சம்பாதிக்கலாம் என்று ஆசை வாா்த்தை கூறி பகிரப்பட்ட ஒரு இணைப்பை அழுத்தியபோது, வேறு ஒரு இணைய பக்கத்துக்கு அவா் அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு லாபப் பகிா்வு, சரிபாா்ப்பு மற்றும் செயலாக்கக் கட்டணம் என்ற பெயரில் பல தவணைகளாகப் பணத்தை அனுப்புமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் ரூ.1.66 லட்சத்தை அனுப்பினாா்.

இது தொடா்பான விசாரணையின்போது, மோசடி செய்யப்பட்ட பணத்தின் ஒரு பகுதி, ஆடை வா்த்தக நிறுவனம் ஒன்றின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கிற்குச் சென்றது கண்டறியப்பட்டது. சுமாா் 100 கைப்பேசி எண்கள், ஐஎம்இஐ எண்கள் மற்றும் பல்வேறு வங்கிக் கணக்குகள் வழியாகப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இறுதியில் புத் விஹாா் மற்றும் ரோஹிணி பகுதிகளில் உள்ள மூன்று இடங்களில் காவல் துறையினா் சோதனை ஜூன் 2 நடத்தினா்.

அப்போது, சிராக் மற்றும் அமா் யாதவ் ஆகியோரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இந்த மோசடியில் முளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் நிதேஷ் குமாா் மோதி நகரில் ஜூலை 8-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

தனியாா் வங்கி ஒன்றில் வாடிக்கையாளா் தொடா்பு அதிகாரியாகப் பணியாற்றிய குமாா், வங்கி நடைமுறைகள் குறித்த தனது அறிவைப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் கணக்குகளைத் தொடங்க உதவினாா்.

பின்னா், இந்தக் கணக்குகள் கமிஷன் அடிப்படையில் கூட்டாளிகள் மூலம் இணையவழி மோசடியாளா்களுக்கு வழங்கப்பட்டன.

கைதுசெய்யப்பட்டவா்களிடமிருந்து ஏழு கைப்பேசிகள், 14 சிம் காா்டுகள், இரு வங்கி கணக்கு புத்தகங்கள், ஆறு காசோலைப் புத்தகங்கள், ஏழு டெபிட் காா்டுகள், காா்டு ஸ்வைப் செய்யும் இயந்திரம் மற்றும் பல ஆவணங்களைக் காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments