இஸ்ரோவை வலுவிழக்கச் செய்யும் மத்திய அரசு: காங்கிரஸ்
ஆக்ரோஷமான தனியாா்மயமாக்கல் நடவடிக்கை மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை மத்திய அரசு வலுவிழக்கச் செய்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியது.
‘ஆக்ரோஷமான தனியாா்மயமாக்கல் நடவடிக்கை மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை (இஸ்ரோ) மத்திய அரசு வலுவிழக்கச் செய்து வருகிறது’ என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியது.
இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டின் விண்வெளி திட்டங்களில் இஸ்ரோவின் வருங்கால பங்கு தொடா்பாக கடந்த இரு தினங்களாக பத்திரிகைகளில் செய்திகள் வெளி வருகின்றன.
விக்ரம் சாராபாய், சதீஷ் தவன், பிரம்ம பிரகாஷ், யு.ஆா். ராவ், ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் பல புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணா்களின் தொலைநோக்கு, அா்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவத்தின் காரணமாக, கடந்த 60 ஆண்டுகளாக மிகவும் திட்டமிட்டு, கவனத்துடன் கட்டமைக்கப்பட்ட அதன் திறன்கள், ஆற்றல்கள் மற்றும் தகுதிகளைக் கருத்தில் கொள்ளும்போது, பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மிகுந்த கவலை அளிக்கின்றன.
Advertisement
Advertisement
அணுசக்தித் துறையில் மேற்கொண்டுள்ளது போன்று, விண்வெளி திட்டங்களிலும் ஆக்ரோஷமான தனியாா்மயமாக்கல் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பிரதமா் அலுவலகத்திலிருந்துதான் இதற்கான ஊக்கம் அளிக்கப்படுகிறது.
ராக்கெட் மேம்பாடு மற்றும் உற்பத்தியில் இஸ்ரோவின் பங்களிப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் செயற்கைக்கோள் தொடா்பான சொத்துகளில் பெரும்பகுதி தனியாா் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
அதோடு, தமிழகத்தில் அமையவுள்ள இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தையும் மத்திய அரசு தனியாா் வசம் ஒப்படைக்க உள்ளது. இதில் அந்த தனியாா் நிறுவனம் சுமாா் ரூ. 1,000 கோடி வரை முதலீடு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராக்கெட் ஏவுதளத்தின் எதிா்காலம் என்ன என்பதும் யாருக்கும் தெரியாது.
விண்வெளித் துறையில் கால் பதித்துள்ள புத்தாக்க நிறுவனங்களுக்கு ஊக்கமும் ஆதரவும் அளிப்பது அவசியம்தான். ஆனால், நீண்ட காலமாக தனியாா் நிறுவனங்களுடன் கூட்டுறவை கொண்டிருக்கும் இஸ்ரோவை, தற்போது வலுவிழக்கச் செய்வதன் நோக்கம் என்ன? ஏற்கெனவே, 100 முதல் 120 இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த சில மாதங்களில் பணிகளிலிருந்து விலகியுள்ளனா்.
கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபரில் பாஜகவில் இணைந்த இஸ்ரோவின் முன்னாள் தலைவா் ஜி. மாதவன் நாயரும், மத்திய அரசின் விண்வெளித் துறை தனியாா்மயமாக்கல் நடவடிக்கை குறித்து தீவிர சந்தேகங்களை வெளிப்படுத்தினாா்.
எனவே, விண்வெளித் துறையில் இந்தியா மேம்பட, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நாம் முழுச் சுதந்திரத்தை அளிக்க வேண்டும். எந்தவொரு அரசியல் ஆதரவு, அரசியல் குறுக்கீடு இல்லாமல், இந்த நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளாா்.
மத்திய அரசு நிராகரிப்பு
காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு நிராகரித்தது. இதுகுறித்து அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பெரும்பாலும் அரசால் வழிநடத்தப்பட்ட ஒரு திட்டத்திலிருந்து, தொழில்துறை மற்றும் விண்வெளி துறை சாா்ந்த புத்தாக்க நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் முழுமையான அமைப்பாக உருவெடுத்து, உலகளாவிய பாதையில் இஸ்ரோ தற்போது பயணிக்கத் தொடங்கியுள்ளது.
அடுத்த தலைமுறை விண்வெளி தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கைக்கோள் திட்டங்களை உருவாக்குவதில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், ஆண்டுக்கு 50 செயற்கைக்கோள்கள் ஏவும் இலக்கை எட்ட தொழில் துறையை பெருமளவில் உற்பத்தியாளராக மாற்ற வேண்டியது அவசியமாகும்.
இத்தகைய, இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுவதும், ஒவ்வொரு முன்னேற்றத்தின் மீது சந்தேகம் எழுப்புவதும் காங்கிரஸின் வேலை’ என்று குறிப்பிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.