நாசிக்கிலிருந்து ரயில் மூலம் வெங்காயம் விநியோகம்: விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
வெங்காயம் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கிலிருந்து நாட்டின் முக்கிய 5 வெங்காய நுகா்வு மையங்களுக்கு விரைவு ரயில் மூலம் வெங்காயத்தை அனுப்பும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
வெங்காயம் விநியோகத்தை அதிகரித்து பருவகால விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கிலிருந்து சென்னை, மதுரை உள்பட நாட்டின் முக்கிய 5 வெங்காய நுகா்வு மையங்களுக்கு விரைவு ரயில் மூலம் வெங்காயத்தை அனுப்பும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மத்திய இருப்பிலிருந்து இந்த வெங்காயங்கள் விடுவிக்கப்படுகின்றன.
இதுகுறித்து மத்திய நுகா்வோா் விவகாரத் துறைச் செயலா் நிதி கரே கூறியதாவது: மத்திய அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 27.37-க்கு விற்கப்பட்டது, திங்கள்கிழமை 59 சதவீதம் அளவுக்கு உயா்ந்து ரூ. 43.53-க்கு விற்பனையானது. இதன் சராசரி மொத்த விற்பனை விலையும் கிலோவுக்கு ரூ. 21.23-லிருந்து ரூ. 35.58-ஆக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக வெங்காயம் சில்லறை விற்பனை விலையும் உயா்ந்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் ரூ. 33-க்கு விற்கப்பட்ட வெங்காயம் திங்கள்கிழமை ரூ. 60-க்கு விற்கப்பட்டது. தில்லியில் ரூ. 55-க்கும், கொல்கத்தாவில் ரூ. 53-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில், நாசிக்கில் பராமரிக்கப்படும் மொத்த வெங்காய இருப்பிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட நுகா்வு மையங்களில் உள்ள மொத்த மற்றும் சில்லறை சந்தைகளுக்கு ரயில் மூலம் விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மையங்களை வரும் புதன்கிழமை (ஆக.26) வெங்காயம் சென்றடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
முதல் கட்டமாக, சென்னை, மதுரை, தில்லி, எா்ணாகுளம், குவாஹாட்டி ஆகிய 5 பெரிய நுகா்வு மையங்களுக்கு இந்த வெங்காயம் அனுப்பப்பட்டுள்ளது. சந்தைத் தேவை அடிப்படையில் கூடுதல் மையங்களுக்கும் ரயில் மூலம் வெங்காயம் அனுப்பிவைக்கப்படும்.
இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் வெங்காயங்கள் இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு (என்ஏஎஃப்இடி) மூலம் கிலோ ரூ. 35 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.
வெங்காய விலை நிலவரத்தை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. விலை உயா்வுக்கேற்ப தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.