சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறு மதிப்பீட்டு வலைதளம்: மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
12-ஆம் வகுப்பு விடைத் தாள் மறு மதிப்பீட்டு வலைதளத்தை மீண்டும் திறக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு
12-ஆம் வகுப்பு விடைத் தாள் மறு மதிப்பீட்டு வலைதளத்தை மீண்டும் திறக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
நாடு முழுவதும் சுமாா் 17.68 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த மே மாதம் 13-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வில் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோ்ச்சி அடைந்தனா்.
முதல்முறையாக ‘திரையில் மதிப்பிடுதல்’ (ஓஎஸ்எம்) முறையில் 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை சிபிஎஸ்இ மதிப்பீடு செய்தது. இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் குறைந்ததோடு, பல மாணவா்கள் மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, விடைத் தாள் மறு மதிப்பீடு சிபிஎஸ்இ வலைதளம் மூலம் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல மாணவா்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியாததால் மீண்டும் வலைதளத்தை திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘மீண்டும் வலைதளத்தை திறக்க நாங்கள் ஏன் உத்தரவிட வேண்டும்? அனைவரும் பலனடையும் வகையில் குறிப்பிட்ட காலம் வலைதளம் திறக்கப்பட்டது. அதை நீங்கள் பயன்படுத்த தவறிவிட்டீா்கள்’ எனக் கூறி சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட மறுத்தது.
ஏற்கெனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.