பள்ளிகளில் ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு!
பள்ளிகளில் ஹிஜாப் அணிவதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
பள்ளிகளில் ஹிஜாப் அணிவதற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் உள்ள தாகூர் பொதுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சுகைனா ரிஸ்வி, தனது தாயார் வாயிலாக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஹிஜாப் அணிந்து பள்ளிக்குச் சென்றதாகக் குறிப்பிட்ட அவர், 11-ஆம் வகுப்பிலும் ஹிஜாப் அணிந்து பள்ளிக்குச் செல்ல விரும்புவதாகவும், அதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி மறுப்பதாகவும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
மேலும், ”ஹிஜாப் அணிவது எனது மத நம்பிக்கையுடன் தொடர்புடையது. அதை அணிய எனக்குத் தனிப்பட்ட சுதந்திரம் உள்ளது. எனவே, ஹிஜாப் அணிவதை எனது அடிப்படை உரிமையாகக் கருதி அதற்கு மறுப்புத் தெரிவிக்கக் கூடாது என பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, ஹிஜாப் அணிந்த தனது பழைய அடையாள அட்டை மற்றும் பள்ளியில் எடுக்கப்பட்ட குழுப் புகைப்படங்கள் ஆகியவற்றையும் மனுவுடன் இணைத்திருந்த அவர், இதுபற்றி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பள்ளி ஆய்வாளர் ஆகியோரிடம் புகாரளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.ஜே. முனீர் மற்றும் இந்தர்ஜீத் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, மதப் பாகுபாடற்ற சூழலைப் பராமரிக்கச் சீருடைகளே உதவுவதாகவும், பள்ளி நிர்ணயித்த சீருடை முறையை மாற்றியமைக்க மாணவர்கள் வலியுறுத்த முடியாது என்றும் தெரிவித்தது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் மாற்றமுடியாத அம்சமல்ல. இதுபோன்ற விவகாரம் எழுப்பப்பட்ட இடங்களிலெல்லாம் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் இன்றியமையாத பகுதி அல்ல என்பதே உயர் நீதிமன்றங்களின் கருத்தாக இருந்து வருகிறது.
ஹிஜாப் அணியாவிட்டால் மதம் ஆபத்துக்குள்ளாகும் என்றும் ஹிஜாப் அணியாத பெண்கள் விலக்கி வைக்கப்படுவார்கள் என்றும் கூற முடியாது. அதை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.
கேரளத்தில் பாத்திமா தஸ்னீம் என்பவர் கேரள அரசுக்கு எதிராகத் தொடுத்த வழக்கில், மாணவர்கள் தங்களது விருப்ப ஆடைகளை அணிய உரிமை இருந்தாலும், கல்வி நிறுவனங்கள் அவற்றின் விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் அமல்படுத்த உரிமையுள்ளது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இரண்டு உரிமைகளுக்கு இடையே முரண்பாடு ஏற்படுகையில் தனிநபர்களின் விருப்பத்தை விட நிறுவனத்தின் ஒட்டுமொத்த நலன் மற்றும் ஒழுக்கத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மாணவரின் மத நம்பிக்கையில் பள்ளி கட்டுப்பாடு விதிக்கவில்லை. மாறாக சீருடை விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்” என நீதிபதிகள் தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
High Court orders refusal of permission to wear hijab in schools
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.