FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருநள்ளாறு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு திருப்பணிக் குழு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்

திருநள்ளாறு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்குக்காக அமைக்கப்பட்ட திருப்பணிக்குழுவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 11:44 am IST
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

திருநள்ளாறு கோயிலின் உப கோயிலின் குடமுழுக்கு விழாவுக்காக திருப்பணிக் குழு அமைத்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், தேவஸ்தான கட்டளை தம்பிரானை கலந்தாலோசித்து, பட்டியலின அல்லது பழங்குடியினத்தை சேர்ந்தவரை உறுப்பினராக சேர்த்து, புதிய குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்கால் அத்திப்படுகை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்ததுவதற்கான திருப்பணிக் குழுவை அமைத்து புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த குழுவை அமைப்பதற்கு முன், இந்த கோயிலின் முதன்மை கோயிலான திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்தின் கட்டளைத் தம்பிரானிடம் கலந்தாலோசிக்கவில்லை எனக் கூறி, ஆணையரிடம் தருமபுர ஆதீனம் தரப்பில் விரிவான மனு அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் ஆதீனகர்த்தர் ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடர்ந்த வழக்கில், ஆலோசிக்காமல் திருப்பணி குழு அமைத்தது சட்டவிரோதம் என்பதால், அந்த உத்தரவை திரும்பப் பெற்றுவிட்டு, புதிய குழுவை அமைக்க புதுச்சேரி அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், 1999 ஆம் ஆண்டில் தருமபுரம் ஆதீனம் தொடர்ந்த வழக்கில், அறங்காவலர் குழு இல்லாத காலங்களில், கோயில் நிர்வாகம், விழாக்கள் தொடர்பாக கட்டளைத் தம்பிரானைக் கலந்தாலோசிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால், உப கோயிலான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் முதன்மை கோயிலான திருநள்ளாறு கோயிலின் மரபுகள் மற்றும் ஆன்மீகச் செயல்பாடுகளில் அரசு தலையிட முடியாது என உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தற்போதைய சூழ்நிலையில் அறங்காவலர் குழு இல்லாததால், சிறப்பு அதிகாரி மட்டுமே கட்டளைத் தம்பிரானைக் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு கலந்தாலோசிக்காமல் அமைக்கப்பட்ட திருப்பணி குழுவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சிறப்பு அதிகாரியான காரைக்கால் மாவட்ட ஆட்சியர், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்தின் கட்டளை தம்பிரானுடன் கலந்தாலோசித்து, புதிய திருப்பணிக் குழுவை உடனே அமைக்க வேண்டும் என்றும், அந்த குழுவில் பட்டியலின, பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு அமைக்கப்படும் புதிய குழு மூலம் அத்திப்படுகை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் குடமுழுக்கு பணிகள் விரைவில் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

summary

Thirunallar Angala Parameswari Amman Temple Consecration Renovation Committee Dissolved: Madras High Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments