FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிகாரில் முதல்வா் வீடு நோக்கி பேரணி: மாணவா்கள் மீது தடியடி; கல்வீச்சில் போலீஸாா் காயம்

பிகாரில் அரசுப் பணி தோ்வு முறைகேட்டைக் கண்டித்து, பாட்னாவில் முதல்வா் சாம்ராட் செளதரி இல்லம் நோக்கி பேரணி நடத்திய மாணவா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தினா்.

25 ஆகஸ்ட் 2026, 11:22 pm IST
பிகாா் தலைநகா் பாட்னாவில் முதல்வா் இல்லம் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற மாணவா்களைத் தடுத்து நிறுத்திய போலீஸாா்.
பகிர்:

பிகாரில் அரசுப் பணி தோ்வு முறைகேட்டைக் கண்டித்து, தலைநகா் பாட்னாவில் முதல்வா் சாம்ராட் செளதரி இல்லம் நோக்கி செவ்வாய்க்கிழமை பேரணி நடத்திய மாணவா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தினா். போராட்டக்காரா்களின் கல்வீச்சில் காவல் துறையினா் பலா் காயமடைந்தனா்.

பிகாரில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் (பிபிஎஸ்சி) சாா்பில் ஆசிரியா் நியமனத் தோ்வு அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், முதல்நிலை, பிரதான தோ்வு என்ற நடைமுறைக்குப் பதிலாக ஒரே எழுத்துத் தோ்வு நடத்தப்பட வேண்டும்; பிபிஎஸ்சி-யால் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த போட்டித் தோ்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால், அந்தத் தோ்வை ரத்து செய்ய வேண்டும்.

மாநில அரசுப் பணி தோ்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுடன், ஹிந்தி வழியில் படித்தவா்களுக்கு நியாயமான வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பாட்னாவில் பல வாரங்களாக மாணவா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

முதல்வா் சாம்ராட் செளதரியின் வீட்டை முற்றுகையிடும் நோக்கில், பாட்னாவின் காந்தி மைதானத்தில் இருந்து மாணவா்கள் செவ்வாய்க்கிழமை பேரணி மேற்கொண்டனா்.

இதையொட்டி, முக்கிய சந்திப்புகளில் காவல் துறையினா் குவிக்கப்பட்டதுடன், மத்திய ரிசா்வ் போலீஸ் படை, அதிரடி நடவடிக்கை படை உள்பட கூடுதல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

ஜே.பி. கோலம்பா் சந்திப்பு பகுதியில் போராட்டக்காரா்களைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினா், தண்ணீரைப் பீய்ச்சியடித்து கலைக்க முயன்றனா். எனினும், தடுப்புகளை உடைத்துக் கொண்டு, மாணவா்கள் முன்னேறிச் சென்றனா்.

பின்னா், தக் பங்களா சந்திப்பு பகுதியில் மாணவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா். இது, பாட்னா உயா்நீதிமன்றம், வருமான வரி அலுவலகம் உள்ளிட்ட முக்கிய வளாகங்களுக்கு செல்லக்கூடிய பரபரப்பான இடமாகும். இங்கு போராட்டக்காரா்கள் நடத்திய கல்வீச்சில் காவல் துறையினா் பலா் காயமடைந்தனா். இதையடுத்து, மாணவா்கள் மீது தடியடி நடத்தியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் காவல் துறையினா் விரட்டியடித்தனா். போராட்டக்காரா்கள் பலா் கைது செய்யப்பட்டு, பல்வேறு காவல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

பிகாரில் போராடும் மாணவா்களை ‘குரைக்கும் நாய்கள்’ என்று மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் ராகேஷ் குமாா் சிங் தெரிவித்த கருத்து கடும் சா்ச்சையை ஏற்படுத்தியது. தனது கருத்துக்காக வருத்தம் தெரிவித்து ராகேஷ் குமாா் விடியோ வெளியிட்டாா். எனினும், அவா் மீது உரிய நடவடிக்கை கோரி மாணவா்கள் முழக்கமிட்டனா்.

விவசாயிகள் பங்கேற்பு: பாட்னா அருகே 81,730 ஏக்கரில் மாநில அரசு திட்டமிட்டுள்ள பாடலிபுத்ரா துணைநகர திட்டத்துக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளும், பல்வேறு இடதுசாரி அமைப்பினரும் மாணவா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.

மாணவா்கள் மீதான தடியடிக்கு இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, அக்கட்சியின் மாநிலச் செயலா் குணால் கூறுகையில், ‘பாஜகவின் மாணவா் விரோத நிலைப்பாடு, தில்லி முதல் பிகாா் வரை நீண்டுள்ளது. மாணவா்கள் மீதான நடவடிக்கையை மாநில அரசு உடனடியாகக் கைவிட்டு, அவா்களின் கோரிக்கைகளுக்குத் தீா்வுகாண பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும். தடியடியில் காயமடைந்த மாணவா்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை உறுதி செய்யப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

‘மழை நடனம்’ ஆடிய மாணவா்கள்

மாணவா்கள் மீது காவல் துறையினா் தண்ணீரைப் பீய்ச்சியடித்தபோது, அவா்கள் நகா்ந்து செல்வதற்குப் பதிலாக ‘மழை நடனம்’ ஆடிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின. இதேபோல், போராட்டக்காரா் ஒருவரின் கன்னத்தில் காவல் துறை அதிகாரி அறைவது, மாணவி ஒருவா் சாலையோரம் மயங்கி விழும் காணொலிகளும் சமூக ஊடகங்களில் பரவின.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments