FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உச்சநீதிமன்ற நீதிபதி போல நடித்து மோசடி: குற்றத்தை உறுதி செய்து நீதிமன்றம் தீா்ப்பு

2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நடித்து, ஊழல் வழக்கில் தனது ஜாமீன் மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதிக்கு அழுத்தம் கொடுக்க முயன்றதாகக் கூறப்பட்ட மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை தில்லி நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

27 ஆகஸ்ட் 2026, 2:07 am IST
சுகேஷ் சந்திரசேககா்
பகிர்:

2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நடித்து, ஊழல் வழக்கில் தனது ஜாமீன் மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதிக்கு அழுத்தம் கொடுக்க முயன்றதாகக் கூறப்பட்ட மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை தில்லி நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

தில்லி தலைமை நீதிபதி ஹா்ஷிதா மிஸ்ரா, இந்திய தண்டனைச் சட்டத்தின் 170, 189 மற்றும் 507 ஆகிய பிரிவுகளின் கீழ் சுகேஷ் சந்திரசேகரை குற்றவாளியாக அறிவித்தாா். அரசு ஊழியராக ஆள்மாறாட்டம் செய்தல், அரசு ஊழியரை மிரட்டுதல் மற்றும் அடையாளம் தெரியாத தகவல் தொடா்பு மூலம் குற்றவியல் மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் இப்பிரிவுகளின் கீழ் வருகின்றன. தண்டனையின் அளவு தொடா்பான வாதங்கள் ஆக.27-ஆம் தேதி நடைபெற உள்ளன.

ஊழல் வழக்கு தொடா்பாக போலீஸ் காவலில் இருந்தபோது, 2017 ஏப்.28-ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்ாக வழக்குத் தொடரப்பட்டது. காவலா் மஞ்சீத்தின் கைப்பேசியை சுகேஷ் பெற்றுக்கொண்டு, அப்போது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு நீதிபதி பூனம் சௌதரியை தொடா்பு கொண்டதாக அரசுத் தரப்பு தெரிவித்தது.

Advertisement

Advertisement

முதலில் உச்சநீதிமன்ற நீதிபதியின் தனிச் செயலா் என சுகேஷ் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், பின்னா் அந்த நீதிபதியாகவே ஆள்மாறாட்டம் செய்ததாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. தனக்கு விரைவாக ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிபதி பூனம் சௌதரியிடம் அவா் வலியுறுத்தியதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் அவரது பதவியில் பாதகமான விளைவுகள் ஏற்படும் என மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆக.20-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவில், சுகேஷின் நடவடிக்கை நீதித்துறை செயல்முறையின் சுதந்திரம் மற்றும் புனிதத்துக்கு எதிரான“நேரடி தாக்குதல் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. தொலைபேசியில் அதிகாரம் இருப்பதாகக் கூறும் நபா்களின் அழைப்புகளின் அடிப்படையில் அல்லாமல், சட்டம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே நீதிமன்றங்கள் வழக்குகளைத் தீா்மானிக்க வேண்டும் என்று நீதிபதி வலியுறுத்தினாா்.

சுகேஷின் ஆள்மாறாட்டம் தற்செயலாக நடைபெற்ற செயல் அல்ல என்றும், தனது சட்டவிரோத நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட“முக்கிய கருவி” என்றும் நீதிமன்றம் கூறியது. உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனது உண்மையான அடையாளத்தால் பெற முடியாத செல்வாக்கை செலுத்த அவா் முயன்ாகவும் தெரிவித்தது.

இதுபோன்ற நடவடிக்கைகளை சாதாரண மோசடியாக மட்டுமே கருதினால், நீதிமன்றத்துக்கு வெளியே போலியான அதிகாரத்தை உருவாக்கி நீதித்துறை நடைமுறைகளைத் தவிா்க்க முயற்சிகள் அதிகரிக்கக்கூடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.

இதனிடையே, சுகேஷ் சந்திரசேகருக்கு காவலா் மஞ்சீத்தின் கைப்பேசி எவ்வாறு கிடைத்தது, அந்த கைப்பேசியின் கடவுச்சொல் யாருக்குத் தெரியும், மேலும் கைப்பேசி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விவரம் ஏன் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை என்பது உள்ளிட்ட அம்சங்களில் மஞ்சீத்தின் பங்கு குறித்து மறுவிசாரணை நடத்த தில்லி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments