18 கோடி முஸ்லிம்களுக்கு 24 எம்.பி.க்களே உள்ளனா்: அசாதுதீன் ஒவைசி
இந்தியாவில் 18 கோடி முஸ்லிம்கள் உள்ள நிலையில் மக்களவையில் 24 முஸ்லிம் எம்.பி.க்களே உள்ளதாக ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி தெரிவித்தாா்.
இந்தியாவில் 18 கோடி முஸ்லிம்கள் உள்ள நிலையில் மக்களவையில் 24 முஸ்லிம் எம்.பி.க்களே உள்ளனா். இதுகுறித்து யாரும் பேசுவதில்லை என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தாா்.
ஹைதராபாதில் மீலாது நபியையொட்டி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சிக்கு ஆதரவளித்து கட்சியை வலுப்படுத்த வேண்டும். வேட்பாளா்களின் வெற்றிக்காக பிராா்த்தனை செய்ய வேண்டும்.
நாட்டில் உள்ள பிற சமூகங்களுக்கு சொந்தமான தலைமை இருக்கும்போது, முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான அரசியல் தலைமை ஏன் இருக்கக் கூடாது?. பிகாரில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். உத்தர பிரதேசத்திலும் நமது கட்சியினருக்கு அல்லா வெற்றியை வழங்குவாா்.
Advertisement
Advertisement
18 கோடி மக்கள்தொகையைக் கொண்ட ஒரு சமூகத்துக்கு (முஸ்லிம்) நாட்டில் வெறும் 24 மக்களவை உறுப்பினா்கள்தான் உள்ளனா். அவா்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை. ரவீந்திரநாத் தாகூா், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோா் வந்தே மாதரத்தின் இரு சரணங்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என முடிவு செய்திருந்தனா்.
இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது. வந்தே மாதரம் பாடல் போன்ற சட்டம் கொண்டு வருவதன் மூலம் பாஜகவும் பிரதமா் மோடியும் தேசத் தலைவா்களை அவமதிக்கின்றனா்.
அனைவருக்கும் ஒரே மாதிரியான நடைமுறை என்பது சமத்துவம் அல்ல. ஹிந்து திருமணச் சட்டம், ஹிந்து வாரிசுரிமைச் சட்டம், ஹிந்து விவாகரத்து சட்டம் ஆகியவை முஸ்லிம்கள் மீதும் திணிக்கப்படுகின்றன. ஆனால், அவா்களின் முயற்சி தோல்வியடையும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.