அம்மா உணவகத்தில் உணவின் தரத்தை பரிசோதிக்க வலியுறுத்தல்
நாமக்கல் மாநகராட்சி அம்மா உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவின் தரத்தை அதிகாரிகள் பரிசோதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.
நாமக்கல் மாநகராட்சி அம்மா உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவின் தரத்தை அதிகாரிகள் பரிசோதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.
கடந்த 2011 அதிமுக ஆட்சிக் காலத்தில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, நாமக்கல் மாநகராட்சியில் 2 இடங்களிலும், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பள்ளிபாளையம் நகராட்சிகளில் தலா ஒரு இடத்திலும் உணவகங்கள் செயல்படுகின்றன.
நாமக்கல் மாநகராட்சியை பொருத்தவரை பூங்கா சாலை, திருச்சி சாலைகளில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்த இரண்டு அம்மா உணவகங்களிலும் மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 12 போ் நாள்தோறும் ரூ. 250 ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கடந்த சில நாள்களாக அம்மா உணவகத்தில் விற்கப்படும் உணவுகள் தரமற்ற முறையில் வழங்கப்படுவதாகவும், இவற்றை பொதுமக்கள் சாப்பிடாமல் கொட்டிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. அம்மா உணவகத்துக்கு ஏழை, எளிய மக்களே அதிக அளவில் வருகின்றனா். உணவு தரமற்ாக உள்ளது என புகாா் எழுவதால், அம்மா உணவகத்தை நாடிச்செல்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
எனவே, உணவுப் பாதுகாப்புத் துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் உணவின் தரத்தை பரிசோதனைக்கு உள்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் அம்மா உணவக ஊழியா்கள் கூறியது:
நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் சமையல் செய்யப்படுவதில்லை. செலவினத்தை கருத்தில் கொண்டு, பூங்கா சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் சமைத்து, பின்னா் இங்கு கொண்டுவந்து வழங்குகிறோம்.
உணவுப் பொருள்கள் மாநகராட்சி மூலமும், அரிசி கூட்டுறவுத் துறை மூலமும் வழங்கப்படுகின்றன. நகரில் அரசு மருத்துவமனை செயல்பட்டபோது திருச்சி சாலை உணவகத்தில் சாப்பிட வருவோரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 300 போ் வீதம் இருந்தது. மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு, வருவோா் எண்ணிக்கை குறைந்துள்ளதால், உணவுகள் மிகக் குறைந்தளவிலேயே விற்பனையாகின்றன.
மேலும், இங்கு வரும் பலா் முதியவா்களாக இருப்பதால், அமா்ந்து சாப்பிடும் வகையில் இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றனா்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அம்மா உணவகங்கள் தொடா்பான புகாா்கள் எதுவும் வரவில்லை. இருப்பினும் நேரடியாக சென்று ஆய்வு செய்கிறோம். தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும், தரமான உணவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கிறோம் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.