அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!
தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்று, அப்டேட் ஆன அம்மா உணவகங்கள்.
தமிழ்நாட்டில் தவெக அரசின் வருகையின் காரணமாக அம்மா உணவகங்கள் புத்துயிர் பெற்றுள்ளன. அம்மா உணவகங்களில் தரமான உணவு ஏழை மக்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டு வருகிறது.
வறுமையில் வாடும் ஆதரவற்றவர்கள், முதியோர்கள், சாலையோரத்தில் வாழும் ஏழை, எளியோர், கூலித் தொழிலாளர்கள் ஆகியோருக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் வகையில் உன்னத நோக்கில் தொலைநோக்குப் பார்வையில் ஏற்படுத்தப்பட்டதுதான் அம்மா உணவகம்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடையே உற்சாக வரவேற்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
மாநகராட்சி, நகராட்சிகளில் இந்த உணவகங்கள் செயல்பட தொடங்கியதால் சாலையோர வாசிகளும், ஏழை, எளியோர், அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்களும் இதில் பயன்பெற்று வந்தனர்.
ஒரு இட்லி - ஒரு ரூபாய், மதிய சாப்பாடு ஐந்து ரூபாய் என யாரும் எதிர்பார்க்கப்படாத மலிவு விலையில் இந்த உணவு வழங்கப்பட்டது.
இலவசம் என்றால் அதற்கு மதிப்பில்லை என்ற நோக்கத்தோடு குறிப்பிட்ட குறைந்த கட்டணத்தை பெற்றுக்கொண்டு அதிக பயன்பாட்டை கொடுக்கும் காலை மற்றும் மதிய உணவுகளை வழங்க அம்மா உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டன.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஐந்து ஆண்டுகள் சிறப்பாக நடைபெற்ற அம்மா உணவகங்கள் அதற்குப் பிறகு வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியிலும் அம்மா உணவகங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு செயல்பட்டு வந்தது.
அதை தொடர்ந்து வந்த திமுக ஆட்சியில் அம்மா உணவகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால் ஏதோ பெயரளவுக்கு மட்டுமே செயல்பட்டு வந்தது.
தினந்தோறும் பல்லாயிரம் கணக்கானோர் இதனால் உயிர் வாழும் சூழ்நிலையில் அம்மா உணவகத்தை புதுப்பிக்க வேண்டுமென கோரிக்கையும் இருந்து வந்தது.
இந்த நிலையில் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு தமிழக முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைக்க நடவடிக்கை எடுத்தது.
இதனடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்கள் தற்போது புத்துயிர் பெற்று புது வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர அம்மா உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். மாத சம்பளமே கிடைக்காத சூழ்நிலையிலும் தங்கள் வேலையைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் கையில் இருந்த பணத்தைப் போட்டு அம்மா உணவகத்தை நடத்த வேண்டிய நிலைமையும் கடந்த காலத்தில் இருந்து வந்தது.
இந்த நிலையில் அம்மா உணவகங்கள் தற்போது புதுப்பொலிவு பெற்றுள்ளதால் அம்மா உணவகத்திற்கு வரும் மக்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சேலத்தில் மட்டும் 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. காலை மற்றும் மதியம் ஆகிய இரண்டு வேலைகளிலும் சுட சுட உணவுகள் வழங்கப்படுவதால் அன்றாடும் கூலி சல்பவர்கள், சாலையோர வியாபாரிகள், ஆதரவற்ற முதியவர்கள் ஆகியோர் இங்கு குறைந்த விலையில் தரமான உணவை சாப்பிட்டு வருகின்றனர்.
காலையில் சுடச் சுட சாம்பார் உடன் ஒரு ரூபாய்க்கு இட்லி வேண்டும் அளவுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதே போல மதியமும் சுடச் சுட சாம்பார் சாதம், தக்காளி சாதம், மற்றும் தயிர் சாதமும் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு அம்மா உணவகத்தில் 1500 இட்லி முதல் 2000 இட்லி வரை விற்பனை நடைபெற்று வருவதாகவும் மதியம் 5 ரூபாய்க்கு சாப்பாடு விற்பனை செய்யப்படுவதாக அம்மா உணவு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலத்தில் அம்மா உணவகத்திற்கு யாருமே வருவதில்லை என்றும் அவ்வாறு வந்தாலும் அவர்களுக்கு தேவையான தரமான உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால் தற்போது புதிய அரசு பொறுப்பேற்ற உடன் எங்களுக்கு தேவையான அனைத்து ரேஷன் பொருட்களும் குறித்த காலத்தில் வந்து விடுவதாகவும் தங்கள் விருப்பப்படி அரசின் வழிகாட்டுதலோடு உணவை தரமாக சமைத்து குறிப்பிட்ட நேரத்தில் மக்களுக்கு வழங்குவதாகவும் இதனால் அம்மா உணவகத்திற்கு தினந்தோறும் வருகை தருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
அதே வேளையில் கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் அம்மா உணவக பணியாளர்களுக்கு சொற்ப அளவிலான ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. 325 ரூபாய் மட்டுமே நாள் ஒன்றுக்கு வழங்கப்படுவதால் தங்களால் குடும்பத்தை நடத்த முடியவில்லை என்றும் 12 ஆண்டுகளாக இதே நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. ஊதியமும் குறிப்பிட்ட தேதிகளில் வருவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அம்மா உணவு ஊழியர்களுக்கு தமிழக அரசு நிரந்தரமான ஒரு ஊதியத்தை ஏற்படுத்த வேண்டும் தங்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
தமிழக அரசு, அம்மா உணவகங்கள் மூலம் ஏழை எளியோர் பசியாற வழிவகை செய்வதை போல அந்த பசியாற உழைக்கும் தங்களுக்கும் தங்கள் வாழ்வு சிறக்கவும் அரசு தங்களுக்கு ஊதி உயர்வு வழங்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் அம்மா உணவத்துக்கான முக்கியத்துவம் கொடுத்து நலிவடைந்த நிலையில் இருந்த அம்மா உணவகத்தை மீட்டெடுத்து புத்துயிர் அளித்த அரசுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் அம்மா உணவக ஊழியர்களும் மக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழக முதலமைச்சரின் இந்த தொலைநோக்கு சிந்தனை தமிழக மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது என்றால் அது மிகை அல்ல.
'Amma Unavagams' have been revitalized and updated following the arrival of the TVK government.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.