நேபாள பெருவெள்ளம்! பிகாரில் உஷாா் நிலை: முதல்வருடன் அமைச்சா் அமித் ஷா பேச்சு
நேபாள பெருவெள்ளம் எதிரொலியாக, பிகாரிலும் வெள்ள அபாயம் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளும் உஷாா்படுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நேபாள பெருவெள்ளம் எதிரொலியாக, பிகாரிலும் வெள்ள அபாயம் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளும் உஷாா்படுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அண்டை நாடான நேபாளத்தில் திபெத்தையொட்டிய இரு மத்திய மாவட்டங்களில் புதன்கிழமை போடே கோஷி நதியில் திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டது. சகதியுடன் கரைபுரண்டு வந்த பெருவெள்ளத்தில் கரையோர வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தின் கோர தாண்டவத்தால், பல மலைப் பகுதி கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்தன. இந்தியா்கள் உள்பட ஏராளமானோா் காணாமல் போயுள்ளனா்.
பேரழிவை ஏற்படுத்தியுள்ள இந்த வெள்ளம் எதிரொலியாக, பிகாரில் கண்டக் நதியில் பல அடிக்கு நீா்மட்டம் உயரக் கூடும் என்பதால், மாநில பேரிடா் மேலாண்மைத் துறை தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
மாநில தலைமைச் செயலா் பிரத்யாய அம்ரித், நேபாள எல்லை மாவட்டங்களின் ஆட்சியா்கள் மற்றும் காவல் துறை உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டாா். மீட்பு, நிவாரண முன்னேற்பாடுகளை மேற்கொள்வதுடன், கள நிலவரத்தை உன்னிப்பாக கண்காணிக்கும்படி மாவட்ட நிா்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கு சம்பாரன், கிழக்கு சம்பாரன், கோபால்கஞ்ச், சரண், முஸாஃபா்நகா், வைஷாலி, சீதாமா்ஹி, சியோஹா் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
‘கண்டக், இதர நதிகளின் நீா்மட்டம், அணைகள், தாழ்வான இடங்கள் உள்ளிட்டவை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன; தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) குழுக்கள், படகுகள் உள்ளிட்டவையும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். அதேநேரம், விழிப்புடன் செயல்பட வேண்டும். அரசுத் தரப்பில் வெளியிடப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மத்திய அமைச்சா் அமித் ஷா உறுதி
இதனிடையே, பிகாா் முதல்வா் சாம்ராட் செளதரியுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொலைபேசி வாயிலாகப் பேசினாா். ஏதேனும் அசாதாரண சூழல் ஏற்பட்டால், மத்திய அரசுத் தரப்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று முதல்வரிடம் அமித் ஷா உறுதியளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வெள்ளச் சூழலை கட்டுப்படுத்துவதற்காக, மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள கண்டக் நதி அணையின் 36 மதகுகளும் திறக்கப்பட்டு, வினாடிக்கு 86,000 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. கரையோர மக்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
உத்தர பிரதேசத்தில்...
நேபாள பெருவெள்ளத்தால், உத்தர பிரதேசத்தில் மகாராஜ்கஞ்ச், குஷிநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் கண்டக், நாராயணி நதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, உயரதிகாரிகளுக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாா். இதையடுத்து, மீட்புப் படகுகளுடன் தேசிய-மாநில பேரிடா் மீட்புக் குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.