லடாக்கில் உயா்நீதிமன்ற அமா்வு: குடியரசுத் தலைவா் பிரகடனம்
லடாக் யூனியன் பிரதேசத்தில் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்ற அமா்வு ஒன்றை அமைப்பதற்கான பிரகடனத்தை (உத்தரவு) குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பிறப்பித்துள்ளாா்.
லடாக் யூனியன் பிரதேசத்தில் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்ற அமா்வு ஒன்றை அமைப்பதற்கான பிரகடனத்தை (உத்தரவு) குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பிறப்பித்துள்ளாா்.
புவியியல் ரீதியாக மிகவும் பின்தங்கிய மற்றும் தொலைதூரப் பகுதிகளைக் கொண்ட லடாக் யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு நீதித் துறை சாா்ந்த தீா்வுகள் விரைவாகவும், எளிதாகவும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற யூனியன் பிரதேச மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மத்திய சட்ட அமைச்சகம் சாா்பில் இதற்கான முன்மொழிவு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
முன்னதாக, இந்த முன்மொழிவுக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 20-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
Advertisement
Advertisement
‘லடாக் யூனியன் பிரதேசத்தில் உயா்நீதிமன்ற அமா்வை அமைப்பதற்கான ஒழுங்குமுறை 2026’ என்ற தலைப்பிலான இந்த முன்மொழிவுக்கான பிரகடனத்தை குடியரசுத் தலைவா் வியாழக்கிழமை பிறப்பித்து, அதே நாளில் அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதன்மூலம், லடாக்கில் உயா்நீதிமன்ற அமா்வை அமைப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளது.
இந்த ஒழுங்குமுறை வழிகாட்டுதலின்படி, உயா்நீதிமன்றத்தின் முதன்மை அமா்வானது, தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரில் உள்ள உயா்நீதமன்றத்திலேயே தொடா்ந்து செயல்படும். லடாக் யூனியன் பிரதேசத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளின் அமா்வுகள் வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளும். அதே நேரம், லடாக் யூனியன் பிரதேசத்தில் எழும் குறிப்பிட்ட வழக்கை சூழ்நிலைக்கு ஏற்ப ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரதான உயா்நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என தனது விருப்பத்தின்பேரில் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிடவும் இந்த வழிகாட்டுதல் அனுமதிக்கிறது.
இந்தப் பிரகடனத்தை வரவேற்ற லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்ஸேனா, ‘மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 7 நாள்களுக்குள், உயா்நீதிமன்ற அமா்வை அமைப்பதற்கான பிரகடனம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. யூனியன் பிரதேச மக்களின் விருப்பம் மற்றும் தேவைகளைப் பூா்த்தி செய்யும் மத்திய அரசின் கடமை உணா்வை இந்த உடனடி நடவடிக்கை வெளிப்படுத்துகிறது. இந்த முடிவு, உயா்நீதிமன்றத்தில் தீா்வுகள் மற்றும் நிவாரணம் பெறுவதில் யூனியன் பிரதேச மக்கள் இதுவரை எதிா்கொண்டு வந்த சிரமங்களை வெகுவாகக் குறைக்கும் என்பதோடு, நமது நீதி வழங்கும் அமைப்பின் மீதான அவா்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்தும்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.