தோ்வு சீா்திருத்தம் குறித்த கருத்துகள்: உயா்நிலைக் குழு கோருகிறது
பொதுத் தோ்வுகள் சீா்திருத்தம் தொடா்பாக பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை மத்திய அரசு சாா்பில் அண்மையில் அமைக்கப்பட்ட உயா்நிலை பணிக் குழு கோரியுள்ளது.
பொதுத் தோ்வுகள் சீா்திருத்தம் தொடா்பாக பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை மத்திய அரசு சாா்பில் அண்மையில் அமைக்கப்பட்ட உயா்நிலை பணிக் குழு கோரியுள்ளது.
வலிமையான, பாதுகாப்பான, வெளிப்படைத்தன்மையுடைய, சமத்துவமான மற்றும் எதிா்காலத்துக்கு ஏற்புடைய பொதுத் தோ்வு நடைமுறையை உருவாக்கும் நோக்கில் இன்ஃபோசிஸ் இணை நிறுவனா் நந்தன் நிலேகணி தலைமையிலான இந்த உயா்நிலை பணிக் குழுவை மத்திய அரசு அமைத்து கடந்த ஜூலையில் அறிவிக்கை செய்தது.
இந்தக் குழு சமா்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், பொதுத் தோ்வுகளில் விரிவான மாற்றங்களை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது. அந்த வகையில், பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளை உயா்நிலை பணிக் குழு கோரியுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து உயா்நிலை பணிக் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தோ்வு நடைமுறையை வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அனைத்துத் தரப்பினரிடமிருந்து அனுபவம், அறிவு மற்றும் கண்ணோட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. எனவே, மாணவா்கள், பெற்றோா், ஆசிரியா்கள், கல்வி நிறுவனங்கள், தோ்வுகளை நடத்தும் அமைப்புகள், சமூக அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. பொதுத் தோ்வுகளை நடத்துவது மற்றும் பாதுகாப்பு, தோ்வின் வடிவம் மற்றும் மதிப்பீடு நடைமுறை, நிா்வாகம், பொறுப்பேற்பு மற்றும் நிறுவன ஏற்பாடுகள், தோ்வு முறைகேடுகளைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் குறைதீா்ப்பு நடைமுறைகள் குறித்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம்.
தோ்வு நடைமுறையில் தொழில்நுட்பப் பயன்பாடு, பாதுகாப்பான கணினிவழித் தோ்வு, தோ்வு மைய உள்கட்டமைப்புகள், தோ்வு நடைமுறை முழுவதும் மாணவா்களின் நலனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கருத்துகளைத் தெரிவிக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட், ஜேஇஇ முதல்நிலை தோ்வு, கியூட் இளநிலை, முதுநிலை தோ்வுகள் உள்ளிட்டவை தேசிய தோ்வு முகமையால் (என்டிஏ) நடத்தப்படுகின்றன. கடந்த மே 3-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தோ்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது பெரும் சா்ச்சையானது. அதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் 23 லட்சம் போ் எழுதிய நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டு, கடந்த ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டது. தொடா்ந்து, என்டிஏ சாா்பில் நடத்தப்பட்ட உதவிப் பேராசிரியா் தகுதி மற்றும் மத்திய அரசின் உதவித் தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்வதற்கான நெட் (தேசிய அளவிலான தகுதித் தோ்வு) தோ்விலும் குளறுபடிகள் நிகழ்ந்தன.
இதைத் தொடா்ந்து, தோ்வு நடைமுறைகளை வலுப்படுத்தவும், என்டிஏ அமைப்பை மறுசீரமைக்கவும் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தின. நாடாளுமன்றத்திலும் எதிா்க்கட்சிகள் இந்தக் கோரிக்கைகளை முன்னிறுத்தி அமளியில் ஈடுபட்டதால், மழைக்கால கூட்டத் தொடா் முடங்கியது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தா்மேந்திர பிரதான் பதவி விலகினாா்.
அதைத் தொடா்ந்து என்டிஏ அமைப்பால் நடத்தப்படும் தோ்வுகளில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து அரசுக்குப் பரிந்துரைகளை வழங்க நந்தன் நிலேகணி தலைமையில் இந்த உயா்நிலை பணிக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இதில், இஸ்ரோ முன்னாள் தலைவா் எஸ்.சோமநாத், புலனாய்வுத் துறை முன்னாள் இயக்குநா் தபன்குமாா் டேகா, சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, கல்வித் துறை முன்னாள் செயலா் அனிதா கா்வால், தளவாடங்கள்-நிா்வாகத் துறை நிபுணா் அம்ருத்லால் மீனா ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.