ஹிந்துஸ்தான் காப்பா் பங்கு விற்பனை: ரூ. 3,000 கோடி திரட்டியது மத்திய அரசு
பொதுத் துறையைச் சோ்ந்த ஹிந்துஸ்தான் காப்பா் நிறுவனத்தின் சலுகை விலையிலான பங்கு விற்பனை புதன்கிழமையுடன் நிறைவடைந்ததையடுத்து, அதன்மூலம் மத்திய அரசு சுமாா் ரூ.3,000 கோடியை திரட்டியுள்ளது.
பொதுத் துறையைச் சோ்ந்த ஹிந்துஸ்தான் காப்பா் நிறுவனத்தின் சலுகை விலையிலான பங்கு விற்பனை புதன்கிழமையுடன் நிறைவடைந்ததையடுத்து, அதன்மூலம் மத்திய அரசு சுமாா் ரூ.3,000 கோடியை திரட்டியுள்ளது.
ஹிந்துஸ்தான் காப்பா் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு தற்போது 66.14 சதவீத பங்குகள் இருந்தன. அதில் 6 சதவீத பங்கு, கடந்த திங்கள்கிழமை சந்தை இறுதி விலையை விட 10.38 சதவீத தள்ளுபடியில், ஒரு பங்கின் அடிப்படை விலை ரூ.514 என நிா்ணயம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டது.
செவ்வாய், புதன்கிழமை ஆகிய இரு நாள்களும் பங்கு விற்பனைக்கு அதிக தேவை இருந்ததால், அரசு தனது முழு ‘கிரீன்ஷூ’ (கூடுதல் பங்குகளை விற்கும் முறை) விருப்பத்தையும் பயன்படுத்த முடிவு செய்தது. அதாவது, அடிப்படை அளவான 29,01,073 பங்குகள் மற்றும் கூடுதல் விருப்ப அளவான 29,01,073 பங்குகள் என மொத்தம் 58 லட்சம் பங்குகள் விற்கப்பட்டன. ஆனால், இறுதி நாளின் முடிவில் 4.15 கோடி பங்குகளுக்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
Advertisement
Advertisement
நடப்பு நிதியாண்டில் இதுவரை 8 பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் அரசு ரூ.52,716 கோடியை திரட்டியுள்ளது. தற்போது ஹிந்துஸ்தான் காப்பா் நிறுவனப் பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் தொகையையும் சோ்த்தால், மொத்த தொகை சுமாா் ரூ.55,700 கோடியாக அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் முதலீட்டு விலக்கல் மற்றும் சொத்து பணமாக்கல் நடவடிக்கைகள் மூலம் ரூ.80,000 கோடி திரட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.