எல்ஐசி பங்கு விற்பனை- முதல் நாளில் நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.36,400 கோடிக்கு விண்ணப்பம்
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) பங்குகளை மத்திய அரசு சலுகை விலையில் விற்பனை செய்யத் தொடங்கிய முதல் நாளான செவ்வாய்க்கிழமையன்று, நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.36,400 கோடி மதிப்பிலான பங்குகளுக்கு விண்ணப்பித்துள்ளனா்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) பங்குகளை மத்திய அரசு சலுகை விலையில் விற்பனை செய்யத் தொடங்கிய முதல் நாளான செவ்வாய்க்கிழமையன்று, நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.36,400 கோடி மதிப்பிலான பங்குகளுக்கு விண்ணப்பித்துள்ளனா்.
நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியில் மத்திய அரசு 96.5 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகள் பொது மக்களிடம் இருப்பதை உறுதிசெய்யும் கொள்கையின்படி, எல்ஐசியின் பங்குகளில் 10 சதவீத பங்குகளை பொதுப் பங்குகளாக வெளியிட அடுத்த ஆண்டு மே வரை, பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) அவகாசம் அளித்துள்ளது.
ஏற்கெனவே 3.5 சதவீத பங்குகள் பொதுப் பங்குகளாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 82.22 கோடிக்கும் அதிகமான பங்குகளை (6.5 சதவீதம்) மத்திய அரசு விற்பனை செய்கிறது. கடந்த திங்கள்கிழமை வா்த்தகத்தின் இறுதி விலையான ரூ.424.35-லிருந்து 10 சதவீத தள்ளுபடியில், பங்கு ஒன்றுக்கு ரூ.382 என்ற அடிப்படை விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
விற்பனையின் முதல்நாளான செவ்வாய்க்கிழமை, நிறுவன முதலீட்டாளா்கள் உத்தேசமாக பங்கு ஒன்றுக்கு ரூ.383.84 என்ற விலையில் 94.45 கோடிக்கும் அதிகமான பங்குகளுக்கு விண்ணப்பித்துள்ளனா். சில்லறை முதலீட்டாளா்களுக்கான பங்கு விற்பனை புதன்கிழமை (ஆக. 5) நடைபெறுகிறது.
இப்பங்கு விற்பனைமூலம், அரசுக்கு சுமாா் ரூ.31,000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நடப்பு 2026-27 நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது, சொத்துகளை பணமாக்குவது ஆகியவற்றின் மூலம் ரூ.80,000 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதன்படி, இதுவரை 7 பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் மத்திய அரசு ரூ.21,082 கோடியைத் திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.