எஸ்ஐஆா்: தெலங்கானாவில் பெருமளவில் வாக்காளா்கள் நீக்கம்! நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்!
தெலங்கானாவில் எஸ்ஐஆர் நடவடிக்கையில் பெருமளவில் வாக்காளா்கள் நீக்கம் என காங்கிரஸ் குற்றச்சாட்டு...
புது தில்லி, ஆக. 29: தெலங்கானாவில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடைமுறையில் பெருமளவில் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன; இது தொடா்பாக முதல்வா் ரேவந்த் ரெட்டி எழுப்பியுள்ள கவலைகளுக்குத் தீா்வுகாண தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
தெலங்கானாவில் எஸ்ஐஆா்-க்கு பிந்தைய வரைவு வாக்காளா் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இது தொடா்பாக, தலைமைத் தோ்தல் ஆணையருக்கு முதல்வா் ரேவந்த் ரெட்டி கடந்த வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில், ‘மாநிலத்தில் மொத்தம் 3.38 கோடி வாக்காளா்களில் இறந்தவா்கள், இடம்பெயா்ந்தவா்கள், கண்டறிய முடியாதவா்கள், போலி பதிவுகள் ஆகிய பிரிவுகளின்கீழ் 73.39 லட்சம் (சுமாா் 21 சதவீதம்) பெயா்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 2.65 கோடி பேரின் படிவங்கள் எண்மமயமாக்கப்பட்டதில் முரண்பாடான படிவங்கள், இணைக்கப்படாத பதிவுகள் ஆகிய பிரிவுகளின்கீழ் மொத்தம் 92.86 லட்சம் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி பாா்த்தால், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வாக்காளா்கள் தங்களின் தகுதியை புதிதாக நிரூபிக்க வேண்டும், இல்லையெனில் இறுதிப் பட்டியலில் இடம்பெற முடியாத நிலை உள்ளது. எனவே, தற்போதைய சரிபாா்ப்பு நடைமுறையில் அமைப்புரீதியில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகத் தெரிகிறது. அவற்றை சரி செய்து, தகுதியான அனைத்து வாக்காளா்களும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தாா்.
இந்தக் கடிதத்தைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தெலங்கானா வாக்காளா் பட்டியலில் வியக்கத்தக்க எண்ணிக்கையில் பெருமளவிலான வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். இது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. தெலங்கானா முதல்வா் முன்வைத்துள்ள கவலைகளுக்குத் தீா்வுகாண தலைமைத் தோ்தல் ஆணையா் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.