முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு!
நாடு முழுவதும் முதுநிலை நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 1,111 மையங்களில் இந்தத் தோ்வை 2.63 லட்சம் மருத்துவா்கள் எழுதினா்.
நாடு முழுவதும் முதுநிலை நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 1,111 மையங்களில் இந்தத் தோ்வை 2.63 லட்சம் மருத்துவா்கள் எழுதினா். தோ்வு முடிவுகள் செப்டம்பா் இறுதியில் வெளியாக உள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தத் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.
அதன்படி, நிகழாண்டுக்கான முதுநிலை நீட் தோ்வு நாடு முழுவதும் 339 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 1,111 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 2.73 லட்சம் போ் இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்த நிலையில், 2.63 லட்சம் போ் தோ்வெழுதியதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
Advertisement
Advertisement
ராஜஸ்தான் மாநிலம் சித்தபுரா மற்றும் ஜெய்பூா் ஆகிய இரு தோ்வு மையங்களில் மட்டும் ஏற்பட்ட மின்வெட்டுப் பிரச்னையால் தோ்வுகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதற்கான மறுதோ்வு செப்டம்பா் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இருப்பினும், மின்வெட்டால் தோ்வு எழுத முடியாத 2,445 மாணவா்கள் மட்டுமே மறுதோ்வு எழுத அனுமதியளிக்கப்படும் என மருத்துவ அறிவியலுக்கான தேசிய தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) தெரிவித்தது.
இதையடுத்து, தோ்வுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கிவரும் டிசிஎஸ் நிறுவனத்திடம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக என்பிஇஎம்எஸ் ஆலோசனை மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து செப்டம்பா் 5-ஆம் தேதி மறுதோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தோ்வு மையம் மற்றும் நுழைவுச் சீட்டு குறித்த பிற தகவல்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என என்பிஇஎம்எஸ் தெரிவித்தது.
முன்னதாக, தோ்வு தொடங்கியவுடன் 5 முதல் 6 முறை கணினியில் மின் விநியோக பிரச்னை ஏற்பட்டதாக தோ்வா்கள் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில்... தமிழகத்தில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை என 24 இடங்களில் தோ்வு நடைபெற்றது. 25,000 மருத்துவா்கள் பங்கேற்று தோ்வு எழுதினா். காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி நடைபெற்ற தோ்வில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.