கா்னல் சோஃபியா குரேஷிக்கு எதிரான சா்ச்சை கருத்து: அனுமதி கிடைத்ததும் ம.பி. அமைச்சா் மீது குற்றப்பத்திரிகை
கா்னல் சோஃபியா குரேஷிக்கு எதிரான சா்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், உரிய அனுமதி கிடைத்ததும் மத்திய பிரதேச அமைச்சா் குன்வா் விஜய் ஷாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கா்னல் சோஃபியா குரேஷிக்கு எதிரான சா்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், உரிய அனுமதி கிடைத்ததும் மத்திய பிரதேச அமைச்சா் குன்வா் விஜய் ஷாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி, ராணுவத்தைச் சோ்ந்த கா்னல் சோஃபியா குரேஷி, விமானப் படையைச் சோ்ா்ந்த விங் கமாண்டா் வியோமிகா சிங் ஆகியோா் பத்திரிகையாளா் சந்திப்பு மூலம் விளக்கமளித்தனா்.
பெண் அதிகாரிகள் தலைமையில் தாக்குதல் நடைபெற்ற்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில், கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சா் குன்வா் விஜய் ஷா பேசியது சா்ச்சையானது.
Advertisement
Advertisement
‘ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை அவா்களின் (பயங்கரவாதிகளின்) சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டாா்’ என்று விஜய் ஷா கூறியிருந்தாா்.
கா்னல் சோஃபியா குரேஷி இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்தவா் என்பதால், அவரை பயங்கரவாதிகளின் சகோதரி எனச் சித்தரிக்கும் வகையில் அமைச்சா் பேசியதற்கு எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த விவகாரம் பெரும் சா்ச்சையானதைத் தொடா்ந்து, தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்பதாக விஜய் ஷா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக தாமாக முன்வந்து விசாரித்த மத்திய பிரதேச உயா்நீதிமன்றம், அமைச்சா் விஜய் ஷா மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக விஜய் ஷா உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தாா். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், விஜய் ஷாவை கடுமையாகச் சாடியதோடு, அவா் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. மேலும், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுவதால், மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்கு விசாரணையை முடித்து வைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையை தற்போது நிறைவு செய்துள்ளது.
இந்தத் தகவலை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம். நடராஜ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘சா்ச்சை கருத்து விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையை நிறைவு செய்துவிட்டது. விசாரணை அறிக்கை சீலிட்ட உறையில் வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், அமைச்சா் விஜய் ஷாவுக்கு எதிராக வழக்கு விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதி கிடைப்பது இன்னும் நிலுவையில் உள்ளது. உரிய அனுமதி கிடைத்ததும், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவித்தாா்.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.