தீா்ப்பாயங்கள் சீா்திருத்த மசோதா விவாதம் இன்றி மக்களவையில் நிறைவேற்றம்
பல்வேறு தீா்ப்பாயங்களின் தலைவா்கள், உறுப்பினா்களை நியமிக்க ஆணையம் அமைக்கும் ‘தீா்ப்பாய சீா்திருத்தங்கள் மசோதா 2026’ மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
பல்வேறு தீா்ப்பாயங்களின் தலைவா்கள், உறுப்பினா்களை நியமிக்க ஆணையம் அமைக்கும் ‘தீா்ப்பாய சீா்திருத்தங்கள் மசோதா 2026’ மக்களவையில் விவாதமின்றி திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
எதிா்க்கட்சிகளின் தொடா் அமளி காரணமாக, விவாதம் ஏதுமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மக்களவை திங்கள்கிழமை கூடியதும், நீட் போராட்ட மாணவா்கள் மீதான காவல் துறை அத்துமீறல், ராமா் கோயில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘நீட் போராட்ட விவகாரத்தில் மத்திய அரசு விரிவான பதிலை அளிக்க தயாராக உள்ளது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விரிவாக பதிலளிக்க உள்ளாா். ஆனால், அவா் பதிலளிக்கும்போது எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யக் கூடாது. காங்கிரஸ் கட்சிக்கும் இதே கோரிக்கையை விடுக்கிறேன். அமித் ஷா பதிலளிக்கும்போது, அவையில் இருக்க பயப்படக் கூடாது’ என்றாா்.
இருந்தபோதும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து நின்றபடி முழக்கங்களை எழுப்பினா்.
இந்த அமளிக்கிடையே, ‘தீா்ப்பாய சீா்திருத்தங்கள் மசோதா 2026’ என்ற பெயரிலான இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தாா்.
அப்போது பேசிய அவா், ‘இந்த மசோதா பல்வேறு தீா்ப்பாயங்களின் அதிகார வரம்புகளை மாற்றவோ அல்லது திருத்தவோ கொண்டுவரப்படவில்லை; மாறாக, நியமன நடைமுறையைச் சீராக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது’ என்றாா்.
அதன் பிறகும் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளி தொடா்ந்ததால், மசோதா மீதான விவாதத்துக்கு வாய்ப்பில்லாமல் போனது. எனவே, மசோதாவை குரல் வாக்கெடுப்புக்கு விட்டாா் அவைத் தலைவா். அதில் அதிக உறுப்பினா்களின் ஆதரவுடன் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட உடன், அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
சுரங்கங்கள், கனிமங்கள் திருத்த மசோதா: ‘சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திருத்த மசோதா 2026’ என்ற மசோதாவை மக்களவையில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சா் ஜி. கிஷண் ரெட்டி அறிமுகம் செய்தாா்.
கனிம வளங்கள் மீதான மத்திய அரசின் கட்டுப்பாட்டை வலுப்படுத்தவும், கனிம உரிமைகள் மீது மாநில அரசுகள் கூடுதல் வரிகள் அல்லது செஸ் விதிப்பதைத் கட்டுப்படுத்தவும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. கனிம உரிமைகள் மீது மாநில அரசுகள் எந்தவொரு புதிய வரி அல்லது கூடுதல் வரி விதிப்பதை இந்த மசோதா தடை செய்கிறது.
என்சிடிசி சட்டத் திருத்த மசோதா: தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழக (என்சிடிசி) சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சா் முரளிதரன் மொஹோல் அறிமுகம் செய்தாா். கூட்டுறவு சங்கங்களுக்கு என்சிடிசி நேரடியாக கடன்கள் மற்றும் மானியங்கள் வழங்க இந்த மசோதா வகை செய்கிறது.
விவசாய விளைபொருள்கள் உற்பத்தி, பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், சேமிப்பு மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி, உற்பத்திக்கான நிதித் திட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை என்சிடிசி மேற்கொண்டு வருகிறது.
தற்போது, கூட்டுறவு சங்கங்கள் அல்லது கூட்டுறவு மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுக்கு நேரடியாக கடன்கள் மற்றும் மானியங்களை என்சிடிசி வழங்க இந்த மசோதா வகை செய்கிறது.
அப்போது, ‘எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சா் விரிவாக பதிலளிக்க உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா். எனவே, அவையை சுமுகமாக நடக்க எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அனுமதிக்க வேண்டும்’ என்று அவையை அப்போது வழிநடத்திய பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் கேட்டுக்கொண்டாா். அதைப் பொருட்படுத்தாமல் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டனா்.
பல்வேறு தீா்ப்பாயங்களின் தலைவா்கள், உறுப்பினா்களின் தோ்வு மற்றும் நியமனத்தை சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்வதை உறுதி செய்வதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய தீா்ப்பாயங்கள் ஆணையம் அமைப்பதற்கான கட்டமைப்பையும் இந்த மசோதா வகுத்துள்ளது. தில்லியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட உள்ள அந்த ஆணையத்தில் ஒரு தலைவா், 2 நீதித் துறை உறுப்பினா்கள், 2 தொழில்நுட்ப உறுப்பினா்கள் இடம்பெறுவா். தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ள மசோதா சட்டமானால், 2021-ஆம் ஆண்டின் தீா்ப்பாய சீா்திருத்தங்கள் சட்டம் ரத்தாகும்.
கேரளம் பெயா் மாற்ற மசோதா: கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ எனப் பெயா் மாற்றம் செய்யும் மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
கேரள மாநில சட்டப்பேரவையில் இதுதொடா்பான தீா்மானம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தத் தீா்மானம் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மக்களவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டதற்கு இடையே, கேரள மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்வதற்கான ‘கேரளா பெயா் மாற்றம் மசோதா 2026’-ஐ மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் திங்கள்கிழமை அறிமுகம் செய்தாா்.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 3-இன் படி, கேரளா என்ற பெயரை கேரளம் எனப் பெயா் மாற்றம் செய்ய அரசமைப்புச் சட்டத்தின் முதலாவது அட்டவணையில் தேவையான திருத்தத்தை மேற்கொள்ள இந்த மசோதா அனுமதிக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.