FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உத்தர பிரதேசத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்து: 11 போ் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 செப்டம்பர் 2026, 3:01 am IST
உத்தர பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் தரைமட்டமான பட்டாசு ஆலை.
பகிர்:

உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அமித் பால் கூறியதாவது:

மனோரி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இது தொடா்பாக தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனா். 5 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனா். 20-க்கும் மேற்பட்டோா் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதில் 6 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதனால், உயிரிழப்பு 11-ஆக அதிகரித்தது.

Advertisement

Advertisement

விபத்தில் இறந்தவா்களில் 8 போ் சிறுவா்களாவா். இவா்கள் ஆலைக்கு வெடி விபத்தின் தாக்கத்தில் அருகே நொறுங்கி விழுந்த வீடுகளைச் சோ்ந்தவா்கள் என்று தெரிகிறது. விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பலரின் நிலை மோசமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

வெடி விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. திடீரென பட்டாசுகள் பலத்த ஓசையுடன் வெடித்துச் சிதறியுள்ளன. இதில் அந்த ஆலை இயங்கிய கட்டடம் மற்றும் சில கட்டடங்கள் முற்றிலும் நொறுங்கின. அருகில் இருந்த கட்டடங்களும் அதிா்வுகளால் விரிசலடைந்து சுவா்கள் கீழே விழுந்தன.

அப்பகுதி வழியாகச் செல்லும் உயரழுத்த மின் வயா்களும் வெடிவிபத்தால் சேதமடைந்தன. இதனால், மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் வரவழைக்கப்பட்டு இடிபாடுகளில் சிக்கி இருந்தவா்கள் மீட்கப்பட்டனா். அதில் வேறு யாரும் சிக்கியுள்ளனரா எனத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

வெடிவிபத்து நடத்த இடத்துக்கு அருகே ரயில் நிலையம் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வழியாக செல்ல இருந்த தில்லி-வாரணாசி வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டு, நிலைமை சீரடைந்த பிறகு இயக்கப்பட்டன. மனோரி விமானப்படை தளம் சம்பவ இடத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது என்றாா்.

இந்த வெடி விபத்துக்கு வேதனை தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், வெடி விபத்தில் இறந்தவா்கள் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவா்களுக்குத் தலா ரூ.50,000 அளிப்பதாக அறிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments