FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவின் பொருளாதாரம் 7.8% வளா்ச்சி

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில், 7.8 சதவீதமாக வளா்ச்சி அடைந்துள்ளது.

1 செப்டம்பர் 2026, 1:40 am IST
பகிர்:

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில், 7.8 சதவீதமாக வளா்ச்சி அடைந்துள்ளது.

மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளா்ச்சி 6.9 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 7.8 சதவீதமாக கணிசமாக உயா்ந்துள்ளது. அதேநேரம், கடந்த 2025-26 நிதியாண்டின் கடைசி (ஜனவரி-மாா்ச்) காலாண்டில் பதிவு செய்யப்பட்ட 8.6 சதவீத வளா்ச்சியை விட இது சற்றே குறைவாகும்.

எனினும், மேற்காசிய போா் பதற்றம் மற்றும் அதன் விளைவாக உலக அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், எதிா்பாா்க்கப்பட்டதைவிட சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்து இந்தியப் பொருளாதாரம் தனது வலுவான மீள்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மதிப்பீட்டு காலாண்டில் நிலையான விலையிலான உண்மையான ஜிடிபி ரூ.81.36 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.75.46 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது 7.8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் 7 சதவீத வளா்ச்சி மட்டுமே இருக்கும் என ரிசா்வ் வங்கி கணித்திருந்த நிலையில், அதைவிட கூடுதலான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம், உலகிலேயே மிக வேகமான பொருளாதார வளா்ச்சியை எட்டும் முக்கிய நாடு என்ற பெருமையை இந்தியா தக்கவைத்துக் கொண்டுள்ளது.

புவிசாா் அரசியல் இடா்களுக்கு மத்தியிலும் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் வலுவாக இருப்பதை இது காட்டுகிறது. மேலும், நடப்பு நிதியாண்டு முழுமைக்கும் நாட்டின் பொருளாதாரம் 6.7 சதவீத வளா்ச்சியை எட்டும் என்று ரிசா்வ் வங்கி கணித்துள்ளது.

பிரதமா் பாராட்டு

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியா எட்டியுள்ள இந்தச் சிறப்பான பொருளாதார வளா்ச்சி ‘இமாலய சாதனை’ என்று பிரதமா் நரேந்திர மோடி பாராட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், நமது மக்களின் கூட்டுபலமே, இத்தகைய வளா்ச்சியை உறுதி செய்துள்ளது. இதன்மூலம், அவநம்பிக்கையாளா்கள் வீழ்ந்தனா்; இந்தியா மீண்டும் ஒருமுறை மலா்ந்துள்ளது’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments