முகப்பு
இந்தியா

நிர்மலா சீதாராமன் கட்டியிருந்த காஞ்சிப் பட்டுப் புடவையின் பின்னணி!

பட்ஜெட் வாசித்தபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்டியிருந்த காஞ்சிபுரம் பட்டுப் புடவை மற்றும் பின்னணி பற்றி...

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 12:33 PM
நிர்மலா சீதாராமன்
பகிர்:

ஒவ்வோர் ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது, பட்ஜெட் மீதான கவனத்தையும் தாண்டி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்டிவரும் புடவைகளும் தனிக் கவனம் பெறும். இந்த ஆண்டு, நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் பட்டுப் புடவையைக் கட்டி வந்தார்!

தொடர்ச்சியாக ஒன்பதாவது முறையாக நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய நாடாளுமன்றத்துக்கு வந்த போது, ​​நாடு முழுவதும் அவர் தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில் இருக்கும் எண்கள், துறைகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.

அதே வேளையில், மற்றொன்றும் பலரது கவனத்தை ஈர்த்தன. அதுதான் அவர் அணிந்திருந்த புடவை. அது காஞ்சிபுரம் பட்டுப் புடவை.

இந்த ஆண்டு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால், அவரது கவனம் தெற்கு நோக்கித் திரும்பியிருக்கலாம் என்று இதனைப் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

காஞ்சிபுரத்தில் நெய்யப்பட்ட, ஆழமான மெஜந்தா நிறப் பட்டுப் புடவையை இந்த ஆண்டு நிர்மலா சீதாராமன் தேர்ந்தெடுத்துள்ளார். காஞ்சிபுரம் பட்டு என்றாலே, அதன் மென்மை, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பிரமாண்டத்திற்குப் பெயர் பெற்றது என்பதை அனைவருமே நன்கறிவர்.

குறிப்பாக, இந்தப் புடவையின் உடல் பகுதி மெஜந்தா நிறம். காப்பி நிற கரை. வெந்தைய மஞ்சள் நிறத்தில் வேலைப்பாடு மற்றும் தலைப்புப் பக்கம் இணைக்கப்பட்டிருந்தது.

பலரும், இந்தப் புடவை தமிழகத்தின் நூற்றாண்டுகள் பழமையான நெசவுத் திறமையை பறைசாற்றும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

முழுவதும் கைத்தறியில் டபுள் கோர்வையில் நெய்யப்பட்டது இந்தக் காஞ்சிப் பட்டுப் புடவை. பார்டரில் - கரையில் ஜரிகை பயன்படுத்தப்படவில்லை.

பட்டுப் புடவை நெய்யும்போது, பெரும்பாலும் ஒரே நேரத்தில் மூன்று சேலைகளைச் சேர்ந்தாற்போல நெய்வதுதான் வழக்கம். இவ்வாறு நெசவு செய்யப்பட்டவற்றில் இரு சேலைகளைக் காஞ்சிக்கு அண்மையில் வந்தபோது அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாங்கியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இதன் விலை விவரம் உறுதி செய்யப்படவில்லை. அனேகமாக இதனுடன் சேர்த்து நெசவு செய்யப்பட்ட இன்னொரு சேலை, காஞ்சியில் இருக்கலாம்.

கடந்த ஆண்டுகளில் அவர் அணிந்திருந்த புடவைகளோடு, இந்த ஆண்டு அவர் அணிந்து வந்திருக்கும் காஞ்சிப்பட்டு, ஒரு சமநிலையை ஏற்படுத்துவது போல பலருக்கும் தோன்றியிருக்கிறது.

கடந்த 2025 ஆம் ஆண்டில், பிகார் தேர்தல் விரைவில் நடைபெறவிருந்த நிலையில், நிர்மலா ​​சீதாராமன், கையால் வரையப்பட்ட மதுபானி கலையால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளை நிற கைத்தறி பட்டுப் புடவையை அணிந்திருந்தார். இது பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவியால் அவருக்கு பரிசளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் புடவை மிதிலா பகுதியின் நாட்டுப்புறக் கலை மீது தேசிய கவனத்தை ஈர்க்க வைத்தது. அப்போது, இந்தப் புடவை பிகாரின் கலாசார அங்கீகாரத்தை நாட்டு மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பார்க்கப்பட்டது.

இதுபோலவே, கடந்த காலங்களில், நிர்மலா அணிந்து வந்த புடவைகளின் பின்னணியும் தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

மத்திய பட்ஜெட்

2024 ஆம் ஆண்டில், அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காந்தா கைவேலைப்பாட்டுடன் கூடிய நீல நிற டஸ்ஸர் பட்டுப் புடவையை அணிந்து வந்தார். அது, துணிகளில் கைகளால் செய்யப்படும் வேலைப்பாடுகள் மூலம் கதைகளைச் சொல்லும் தையல் முறை.

அதற்கு முன்பு, 2023 ஆம் ஆண்டில், பளிச்சென்ற சிவப்பு பட்டுப் புடவையில், கருப்பு மற்றும் தங்க ஜரிகை கோயில் கோபுர பார்டர்களுடன், கர்நாடகத்தில் உருவான 'கசுதி' கைவேலைப்பாடு கொண்ட புடவையை அணிந்திருந்தார்.

2022 ஆம் ஆண்டில், ஒடிசாவில் தயாரிக்கப்பட்ட கஞ்சம் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்களை மையக்கருவாகக் கொண்ட பழுப்பு மற்றும் மெரூன் நிற போம்காய் புடவை அணிந்து வந்திருந்தார்.

2021 ஆம் ஆண்டில், அவர் தெலங்கானாவிலிருந்து வந்த சிவப்பு மற்றும் வெள்ளை நிற போச்சம்பள்ளி இக்கத் புடவையை தேர்வு செய்திருந்தார்.

அதுபோலவே, 2020 ஆம் ஆண்டில், கரோனா பேரிடர் காரணமாக நிச்சயமற்ற தன்மைக்கு இடையே, சீதாராமன் நீல நிற பார்டர்களைக் கொண்ட மஞ்சள் - தங்க பட்டுச் சேலையை அணிந்திருந்தார், இது நம்பிக்கை மற்றும் மறுமலர்ச்சியின் சின்னமாகப் பார்க்கப்பட்டது.

மேலும், 2019 ஆம் ஆண்டில், அவரது முதல் பட்ஜெட்டின்போதே, இந்த வரிசைப் பட்டியலின் ஆரம்பம் தனித்துக் காட்டத் தொடங்கியிருந்தது. அப்போது அவர் இளஞ்சிவப்பு நிற மங்களகிரி பட்டுப் புடவை அணிந்து வந்தார்.

அப்போது, காலனித்துவ பாரம்பரியத்திலிருந்து ஒரு முறிவையும் அவர் வெளிப்படுத்தினார், அதுதான், பட்ஜெட் உரைகளை பெட்டியில் கொண்டு வராமல், சிவப்புத் துணியால் ஆன உரையில் கொண்டு வந்து அதற்கும் தனிக்கவனம் கொடுத்திருந்தார்.

இந்த ஆண்டில் தமிழ்நாட்டின் சிறப்புகளில் ஒன்றான காஞ்சிப் பட்டுப் புடவையில் வந்து, தமிழ்ப் பெண்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்!

summary

This visual journey through India's looms has been in keeping with Nirmala Sitharaman's choices even from earlier years. But what made her select this saree this year?

முழு கட்டுரையைப் படிக்க →