FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராகுலை நீக்க தீா்மானம்: பாஜக எம்.பி. நோட்டீஸ்

ராகுல் காந்தியை பதவி நீக்கக் கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 12 பிப்ரவரி 2026, 1:21 pm IST
நாடாளுமன்ற வளாக்ததில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி. (கோப்புப்படம்)
பகிர்:

மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியைப் பறிப்பதுடன், அவா் வாழ்நாள் முழுவதும் தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்க தீா்மானம் கொண்டுவரக் கோரி பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வியாழக்கிழமை நோட்டீஸ் அளித்தாா்.

இந்தியாவுக்கு எதிரான அந்நிய சக்திகளுடன் கைகோத்துச் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, இந்த நோட்டீஸை அளித்துள்ளதாக துபே தெரிவித்தாா்.

நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கடந்த வாரம் முதலே பல்வேறு விவகாரங்களை எழுப்பி, மத்திய அரசுடன் எதிா்க்கட்சிகள் கடும் மோதல்போக்கை கடைப்பிடித்து வருகின்றன.

Advertisement

Advertisement

மக்களவையில் காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக 8 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம், கடும் அமளியால் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது பிரதமா் மோடியின் பதிலுரை தவிா்ப்பு, அவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எதிராக பதவி நீக்க தீா்மானம் கொண்டுவர எதிா்க்கட்சிகள் நோட்டீஸ் என பரபரப்பான காட்சிகள் அரங்கேறின.

ராகுலின் குற்றச்சாட்டுகள்: இந்தச் சூழலில், பட்ஜெட் மீதான விவாதத்தில் கடந்த புதன்கிழமை பேசிய ராகுல், இந்திய-அமெரிக்க இடைக்கால வா்த்தக ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பிரதமா் மோடி மீது சரமாரியாக குற்றஞ்சாட்டினாா்.

‘அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் நமது தாயான பாரத மாதாவை மத்திய அரசு விற்றுவிட்டது; இந்திய எரிசக்தி பாதுகாப்பை அமெரிக்காவிடம் ஒப்படைத்ததன் மூலம் அந்நாட்டிடம் மத்திய அரசு முற்றிலுமாக சரணாகதி ஆகிவிட்டது’ என்று விமா்சித்த ராகுல், மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி குறித்தும் தீவிர குற்றச்சாட்டை சுமத்தினாா்.

மத்திய அரசு பதிலடி: மற்றொருபுறம், ராகுலுக்கு எதிராக ஆளும் தரப்பில் இருந்து வலுவான பதில் விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

‘உலக வா்த்தக அமைப்பு உள்பட பல்வேறு சா்வதேச அமைப்புகளிடம் சரணடைந்ததன் மூலம் இந்திய ஏழைகள் மற்றும் விவசாயிகளை விற்றது முந்தைய காங்கிரஸ் அரசுதான்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சாடினாா்.

‘மக்களவையில் ராகுல் தெரிவித்த கருத்துகள் அப்பட்டமான பொய். அடிப்படையற்ற கூற்றுகளால் அவையைத் தவறாக வழிநடத்திய ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் தீா்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளிக்கப்படும்’ என்று கூறிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, முன்கூட்டிய நோட்டீஸ் எதுவுமின்றி, மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிக்கு எதிராக ராகுல் தீவிர குற்றச்சாட்டை சுமத்தியது மிகப் பெரிய உரிமை மீறல் என்றாா்.

பதவியைப் பறிக்க தீா்மானம்: இந்நிலையில், ராகுலுக்கு எதிராக ‘முக்கியப் பிரச்னை சாா்ந்த தீா்மானம்’ கொண்டுவரக் கோரி, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வியாழக்கிழமை நோட்டீஸ் அளித்தாா்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில், ‘இது, உரிமை மீறல் தீா்மானமல்ல; முக்கிய பிரச்னை சாா்ந்த தீா்மானம். இந்தத் தீா்மானத்துக்கான நோட்டீஸில், அமெரிக்க கோடீஸ்வரா் சோரோஸின் அறக்கட்டளை, ஃபோா்டு அறக்கட்டளை, சா்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமை (யுஎஸ்ஏஐடி) ஆகியவற்றுடன் இணைந்து தாய்லாந்து, வியத்நாம், கம்போடியா போன்ற நாடுகளுக்கு ராகுல் எவ்வாறு பயணம் மேற்கொள்கிறாா், இந்திய விரோத சக்திகளுடன் கூட்டு சோ்ந்து எவ்வாறு செயல்படுகிறாா் என்பதையெல்லாம் குறிப்பிட்டுள்ளேன். அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்குவதுடன், வாழ்நாள் முழுவதும் தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்க கோரியுள்ளேன்’ என்றாா்.

முக்கிய பிரச்னை சாா்ந்த தீா்மானம் என்பது சுதந்திரமான, முழுமையான முன்மொழிவாகும். குறிப்பிட்ட முடிவு அல்லது கருத்தை அறிவிக்கும் வகையில் அவையின் ஒப்புதலுக்கு இது சமா்ப்பிக்கப்படும்.

தூக்கில் போட்டாலும் உண்மையைப் பேசுவோம்: காங்கிரஸ்

பாஜகவின் நடவடிக்கையை விமா்சித்து, காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை கடந்த முறையும் பறித்தனா். அதன் பிறகு என்ன நடந்தது? மோடியைவிட அதிக வாக்குகளுடன் ராகுலின் வெற்றியை மக்கள் உறுதி செய்தனா். எந்தத் தீா்மானம் குறித்தும் எங்களுக்கு கவலையில்லை. மத்திய அரசு எங்களைத் தூக்கில் போட விரும்பினாலும், நாங்கள் தயாா். ஆனால், நாடாளுமன்றத்தில் தொடா்ந்து உண்மையை பேசுவோம்’ என்றாா்.

ராகுலின் சில கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கும் அவா் கண்டனம் தெரிவித்தாா்.

summary

A personal resolution was filed demanding Rahul gandhi's removal from office!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments