காதலர் தினம்! ரோஜா பூக்களின் விலை சதமடித்தன!!
காதலர் தினம் என்பதால் ரோஜா பூக்களின் விலைகள் உயர்ந்துள்ளது பற்றி..
காதலர் தினத்தையொட்டி நாடு முழுவதும் பலவிதமான ரோஜாக்கள் விற்பனையாகி வரும் நிலையில் ரோஜாப் பூக்களின் விலை அதிகரித்துள்ளன. சில முக்கிய நகரங்களில் ஒற்றை ரோஜா பூவின் விலை ரூ.100 எட்டியிருக்கிறது.
சாதாரணமாக விற்பனையாகும் ரோஜா பூக்கள் ஒன்று ரூ.15 முதல் ரூ.30 வரை இன்று விற்பனையாவதாகவும், பெங்களூர் ரோஜா என்று அழைக்கப்படும் சிவப்பு வண்ண ரோஜாக்கள் இன்று பல நகரங்களில் ஒரு பூ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையாவதாகவும் கூறப்படுகிறது.
அழகாக வடிவமைக்கப்பட்ட உறையில் சுற்றிக் கொடுக்கப்படும் ரோஜா பூக்கள் ரூ.120 வரை விற்பனையாகிறதாம்.
Advertisement
Advertisement
காதலர் தினம் மற்றும் மூகூர்த்த நாள்கள் என்பதால் ரோஜாக்களின் விலை அடுத்த வாரம் வரை உயர்ந்தே இருக்கும் என்றும் மலர் வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், காதலை சொல்பவர்களும், காதலை சொல்லிவிட்டு, பதிலுக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்குமான பண்டிகையாக இருப்பது காதலர் தினம்.
காதலர் தினத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மலர்சந்தையில் ரோஜாப்பூகளின் விற்பனை கடந்த ஒரு சில நாள்களாகவே அதிகரித்து காணப்பட்டது.
கொத்தாக ஒரே கட்டில் 10 அல்லது 20 ரோஜாக்களைக் கொண்ட பூங்கொத்து போன்ற தாஜ்மஹால் ரோஜா நிறம் மற்றும் தரத்துக்கு ஏற்ப ரூ.500 ரூ.800 வரையிலும் விற்பனையாகி வருவதாகக் கூறப்படுகிறது.
அதுபோல, பிங்க் ரோஜா, ஆரஞ்சு ரோஜா, மஞ்சள் ரோஜா உள்ளிட்ட வகைகள் முறையே ரூ.400, ரூ.350 போன்ற விலைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.
சென்னையில் ஒரு ரோஜா பூவின் விலை ரூ.75 முதல் விற்பனையாகி வருகிறது. பல பூச்சந்தைகளில் ஆயிரக்கணக்கான பூங்கொத்துகள் விற்பனையாகியிருப்பதால், மலர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.