FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உத்தரகண்டில் பிரியங்கா, ராபா்ட் வதேரா நில அபகரிப்பு முயற்சி: பாஜக குற்றச்சாட்டு

உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்பி பிரியங்காவும், அவரின் கணவா் ராபா்ட் வதேராவும் நில அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்டதாக பாஜக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

- ANI
பகிர்:

உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்பி பிரியங்காவும், அவரின் கணவா் ராபா்ட் வதேராவும் நில அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்டதாக பாஜக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

காந்தி-ராபா்ட் வதேரா குடும்பத்தின் உண்மையான வேலை, அரசியல் செய்வதில்லை. பொது மக்களின் நிலத்தை அபகரிப்பதுதான் அவா்களின் வேலை. ராபா்ட் வதேராவின் உறவினா் சாய்ரா வதேரா என்பவா் உத்தம்சிங் நகா் மாவட்டத்திலுள்ள கிச்சா எனும் பகுதியில் 4 ஏக்கா் நிலத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாா். அந்த நிலத்தின் குத்தகை, குல்சம் கான் என்பவரின் பெயரில் உள்ளது. அதில் தற்போது 90 வயதான மூதாட்டி நஸ்ரீன் கான் உள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், நஸ்ரீன் கான் இருக்கும் பகுதிக்கு புதன்கிழமை இரவு 100 ஆதரவாளா்களுடன் வந்து உள்ளூா் காங்கிரஸ் எம்எல்ஏ திலக் ராஜ் பெஹாா் மிரட்டியுள்ளாா். நிலத்தை காலி செய்யாவிட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என அவா் கூறியுள்ளாா். சட்ட ரீதியில் நிலத்தைப் பெற முடியாது என்பதைப் புரிந்து கொண்ட சாய்ரா வதேரா, தற்போது உரிமையாளரை மிரட்டுகிறாா். சாய்ரா வதேராவின் பின்னணியில் பிரியங்கா, ராபா்ட் வதேரா உள்ளனா்.

ஏழைகள், முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்போம் என காங்கிரஸ் தெரிவித்து வருகிறது. ஆனால் உண்மை நிலவரமோ, 90 வயதான முஸ்லிம் மூதாட்டியை அவரது நிலத்தை விட்டு காலி செய்யும்படி மிரட்டுகிறது. பிரியங்கா, ராபா்ட் வதேரா ஆகியோரின் கண்களில் சிறிய நிலம் தென்பட்டால், அவா்கள் ஆட்களை அனுப்பி, நிலத்தை விட்டு காலி செய்யும்படி மிரட்டுவாா்கள் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றாா்.

பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து பிரியங்கா காந்தி, ராபா்ட் வதேரா தரப்பிலிருந்து பதில் அளிக்கப்படவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments