முதல்வராக ஒரு மாதம் நிறைவு: சித்தராமையாவிடம் ஆசி பெற்ற சிவகுமார்!
முதல்வர் சிவகுமார் சித்தராமையாவுடன் சந்தித்தது பற்றி..
கர்நாடக முதல்வராகப் பதவியேற்று ஒரு மாதத்தை நிறைவு செய்த டி.கே. சிவகுமார், சித்தராமையாவை இன்று சந்தித்து ஆசியையும், வழிகாட்டுதலையும் பெற்றார்.
சிவகுமார் முதல்வராகப் பதவியேற்று ஒரு மாத காலம் நிறைவடைந்த நிலையில், தனது மனைவி உஷா, சகோதரர் டி.கே. சுரேஷ் ஆகியோருடன் மூத்த காங்கிரஸ் தலைவரான சித்தராமையாவை அவரது இல்லத்தில் சந்தித்து அவருடன் காலை உணவு அருந்தினார்.
இதுதொடர்பாக சிவகுமாரின் எக்ஸ் தள பதிவில்,
Advertisement
Advertisement
கர்நாடக முதல்வராகப் பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், எனது குடும்பத்தினருடன் சித்தராமையாவைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். சந்திப்பு தொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
சித்தராமையாவின் தலைமைத்துவம், அனுபவம் மற்றும் கர்நாடக மக்களுக்கான அவரது தளராத அர்ப்பணிப்பு ஆகியவை நமது மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்தியுள்ளன.
வலுவான மற்றும் அதிக முன்னேற்றம் அடைந்த கர்நாடகத்தை உருவாக்க நாங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் வேளையில், அவரது வழிகாட்டுதலையும் ஆசியையும் நான் பெரிதும் மதிக்கிறேன். அவரது ஆசிகளுக்கும் தொடர்ச்சியான வழிகாட்டுதலுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சித்தராமையாவின் எக்ஸ் பதிவில்,
முதல்வர் டி.கே. சிவகுமார் இன்று தனது மனைவி உஷா, சகோதரர் டி.கே. சுரேஷ் ஆகியோருடன் எனது இல்லத்திற்கு வருகை தந்தார். நாங்கள் ஒன்றாகக் காலை உணவு உண்டதாகவும், உரையாடியதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் மேலிடத்தின் அறிவுறுத்தலின் பேரில் மே 28 அன்று சித்தராமையா முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, ஜூன் 3 அன்று சிவகுமார் 13 அமைச்சர்களுடன் முதல்வராகப் பதவியேற்றார்.
இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டதன் மூலம், எட்டு முறை எம்எல்ஏவாக இருந்த சிவகுமார், தனது நீண்ட காலக் கனவை நனவாக்கினார். சிவகுமார் இதற்கு முன்பு சித்தராமையாவின் அமைச்சரவையில் துணை முதல்வராகப் பணியாற்றியுள்ளார்.
மே 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு, முதல்வர் பதவிக்காக சித்தராமையாவுக்கும், அப்போது மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
பின்னர், கட்சி சித்தராமையாவை முதல்வராகத் தேர்ந்தெடுத்ததுடன், துணை முதல்வர் பதவியை ஏற்குமாறு சிவகுமாரை இணங்க வைத்தது. மூன்று ஆண்டுகள் கழித்து சிவகுமார் கர்நாடகத்தின் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்று இன்றுடன் ஒரு மாத காலம் நிறைவடைந்தது.
Karnataka Chief Minister D K Shivakumar, who completed one month in his position, on Friday called on his predecessor Siddaramaiah to seek his blessings and guidance.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.