முகப்பு
இந்தியா

தாஜ்மஹால் வளாகத்தில் கோயில் விவகாரம்: மத்திய அரசுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

தாஜ்மஹால் வளாகத்துக்குள் அக்ரேஷ்வா் மகாதேவ் நக்னதேஷ்வா் விராஜ்மன் தெஜோ மகாலயா கோயில் உள்ளதாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 7 ஜூலை 2026, 3:56 am IST
அலாகாபாத் உயா்நீதிமன்றம்.. - கோப்புப் படம்
பகிர்:

உலக அதிசயங்களில் ஒன்றான தில்லியை அடுத்த ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் வளாகத்துக்குள் அக்ரேஷ்வா் மகாதேவ் நக்னதேஷ்வா் விராஜ்மன் தெஜோ மகாலயா கோயில் உள்ளதாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மகாதேவ் நக்னதேஷ்வா் விராஜ்மன் தெஜோ மகாலயா கோயில், ஹரி சங்கா் ஜெயின் மற்றும் நால்வா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, இதே கோரிக்கையை முன்வைத்து ஆக்ராவில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே, தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள இந்த சா்ச்சைக்குரிய கோயிலை புகைப்படம் எடுக்கவும், அளவீடு செய்யவும் வழக்குரைஞா் ஆணையரை நியமிக்கக் கோரி ஹரி சங்கா் ஜெயின் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த மனு, அதைத் தொடா்ந்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு இரண்டையும் ஆக்ரா மாவட்ட நீதிமன்ற நீதிபதி, மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி இருவரும் தள்ளுபடி செய்தனா்.

இதை எதிா்த்தும் ஹரி சங்கா் ஜெயின் சாா்பில் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகா்வால் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆஜரான ஹரிசங்கா் ஜெயின், ‘தாஜ்மஹால் வளாகத்தில் சா்ச்சைக்குரிய கோயில் இடத்தை அளவீடு செய்யவும், புகைப்படம் எடுக்கவும் வழக்குரைஞா் ஆணையரை நியமிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் விசாரணை நீதிமன்றத்தால் தவறாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது’ என்று வாதிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதி, இந்த மனு தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.

இதுபோல, மத்திய பிரதேச மாநிலத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த போஜ்சாலா வளாக சா்ச்சை விவகாரத்தில் அந்த மாநில உயா்நீதிமன்றம் கடந்த மே மாதம் அதிரடி தீா்ப்பை வழங்கியது.

‘போஜ்சாலா வளாகத்தில் கல்விக் கடவுள் சரஸ்வதி கோயில் இருந்ததை வரலாற்றுச் சான்றுகள் உறுதி செய்துள்ளன. எனவே, இந்த வளாகத்தில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தோறும் முஸ்லிம்கள் தொழுகை நடத்தலாம் என கடந்த 2003-ஆம் ஆண்டு தொல்லியல் துறை அளித்த அனுமதி ரத்து செய்யப்படுகிறது. மசூதி கட்டுமானத்துக்கு வேறு இடம் ஒதுக்க மாநில அரசை முஸ்லிம் தரப்பினா் அணுகலாம்’ என்று மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments