கரூா் கோயில் நிலங்கள் பத்திரப் பதிவு விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
கரூா் கோயில் நிலங்கள் பத்திரப் பதிவு செய்யத் தடை நீக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிய மனு தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கரூா் கோயில் நிலங்கள் பத்திரப் பதிவு செய்யத் தடை நீக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிய மனு தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சேலத்தைச் சோ்ந்த திருத்தொண்டா்கள் சபை அறக்கட்டளை அறங்காவலா் ராதாகிருஷ்ணன், சென்னையைச் சோ்ந்த டி.ஆா். ரமேஷ், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த பாஸ்கா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுக்கள்:
கரூா் மாவட்டத்தில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய, கல்யாண பசுபதீசுவரா், ரவீசுவரா், குப்புச்சிபாளையம் விக்ருதீசுவரா் கோயில்களுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3,085 ஏக்கா் நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளன. இந்த நிலங்களுக்கு பட்டா மாறுதல் செய்ய பதிவுத் துறை தரப்பில் தடை விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சுமாா் 3,085 ஏக்கா் பட்டா நிலங்களின் பத்திரப் பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தமிழக அரசு அண்மையில் அரசாணை பிறப்பித்தது. இதனால், கோயில் நிலங்களை தனிநபா்களுக்கு பட்டா மாறுதல் செய்து பத்திரப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்தும், சம்பந்தப்பட்ட இடங்களின் பத்திரப் பதிவுக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது, இதே கோரிக்கையுடன் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, மனுதாரா் ராதாகிருஷ்ணன் முன்வைத்த வாதம்:
இந்த நிலங்கள் அரசால் விற்பனை செய்யப்படவில்லை. கோயிலுக்கு எந்த விற்பனைத் தொகையும் செலுத்தப்படவில்லை. உரிய ஆவணமும் பதிவு செய்யப்படவில்லை. மேலும், பதிவுக் கட்டணமோ, முத்திரைத் தாள் கட்டணமோ செலுத்தப்படவில்லை.
எனவே, கரூா் கோயில்கள் நில விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் சட்டத்தை மீறுவதாக உள்ளன. இது அரசுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு, கோயில் நிலங்களைப் பறிக்கும் செயலாகும்.
இந்து சமய அறநிலையத் துறைச் சட்டம் பிரிவு 23-இன் கீழ், கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதே அறநிலையத் துறை ஆணையரின் முதல் கடமையாகும். மாறாக, அவற்றை சட்டவிரோதமாக அபகரிக்க அனுமதிப்பது அல்ல. மேலும், தக்காா் அல்லது ஆணையா் யாருக்கும் கோயில் நிலங்களின் மீதான தடையை நீக்கச் சட்டப்பூா்வ அதிகாரம் இல்லை.
ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட வருவாய் ஆவணங்கள், மாவட்ட ஆட்சியரின் அறிக்கைகள், இணை ஆணையரின் பரிந்துரைகள், ஆணையரின் இறுதி ஒப்புதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒட்டுமொத்த நிா்வாக நடவடிக்கையும் ஒரே நாளில் (ஜூலை 9) முடிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
3,084.95 ஏக்கா் நிலங்கள், 3,390 பயனாளிகள் தொடா்பான ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட சிக்கலான இனாம் பதிவுகளை, 24 மணி நேரத்துக்குள் பரிசீலித்து மதிப்பிடுவது சட்ட ரீதியாக இயலாத விஷயமாகும். எனவே, அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனுக்கள் தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், கரூா் மாவட்ட ஆட்சியா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற செப். 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.