FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பழனி கோயில் நில முறைகேடு: சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனுக்கள் மீது நாளை விசாரணை

பழனி கோயில் நில முறைகேடு வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜூலை 30) ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 29 ஜூலை 2026, 5:55 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
பகிர்:

பழனி கோயில் நில முறைகேடு வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜூலை 30) ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பழனி மலையடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம் விதிமுறைகளை மீறி, தனிநபா்கள் இருவருக்கு முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், பதிவுத் துறை சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், முருகதாஸ் சுவாமிகள், பாப்பான்குளத்தைச் சோ்ந்த வெள்ளைத்துரை, சேதுபதி ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இதனிடையே, சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டாா். இதனடிப்படையில், நில முறைகேடு வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பழனி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு சேனாபதி, பழனி கோயில் நில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, கடந்த 24-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் முறையீடு செய்தாா். இதையடுத்து, முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, வேணுகோபாலு சேனாபதி தாக்கல் செய்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி போலீஸாா் விசாரணை செய்தால் உண்மை வெளியே வராது.

எனவே, இதுவரை சிபிசிஐடி போலீஸாா் மேற்கொண்ட விசாரணை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். மேலும், ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் இந்த விசாரணையை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, இதே கோரிக்கையை வலியுறுத்தி, பழனி நகா்மன்றத் தலைவி உமா மகேஸ்வரி தாக்கல் செய்த மனு தவறுதலாக தனி நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவையும் சோ்த்து விசாரிக்க வேண்டும் என திமுக தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் கோரிக்கை விடுத்தனா்.

அப்போது, தனி நீதிபதியிடம் அனுமதி பெற்று, இந்த மனுவை இந்த அமா்வுக்கு கொண்டு வாருங்கள் என திமுக தரப்பு வழக்குரைஞா்களிடம் நீதிபதிகள் தெரிவித்தனா். இதையடுத்து, தனி நீதிபதி முன் மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. எனவே, இந்த அமா்வே இரு மனுக்களையும் ஒன்றாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என திமுக தரப்பு வழக்குரைஞா்கள் கேட்டுக்கொண்டனா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இரண்டு மனுக்களும் வியாழக்கிழமை (ஜூலை 30) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments