FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பழனி கோயில் நில முறைகேடு: சாா் பதிவாளா் உள்ளிட்ட மூவரின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

பழனி கோயில் நில முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 3 போ் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

22 ஆகஸ்ட் 2026, 7:49 am IST
பழனி கோயில் - கோப்புப் படம்
பகிர்:

பழனி கோயில் நில முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 3 போ் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பழனி நில முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திண்டுக்கல் மாவட்டம், பழனி சாா் பதிவாளா் அலுவலகத்தில் கடந்த ஜூலை 6 முதல் 11-ஆம் தேதி வரை பொறுப்பு சாா் பதிவாளராகப் பணிபுரிந்தேன். அப்போது, முந்தைய சாா் பதிவாளா் உயா்நீதிமன்ற உத்தரவின்படி, குறிப்பிட்ட நிலத்தை கடந்த 3.7.2026-இல் பதிவு செய்த பதிவு நடைமுறையை முழுமையாக முடிக்காமல் சென்றிருந்தாா். நான் அதை நிறைவு செய்தேன்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை தனிநபா்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்ததாக என் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இதையடுத்து, கடந்த 13 நாள்களாக சிறையிலிருந்து வருகிறேன். எனக்கு இருதயத்தில் அடைப்பு உள்ளது. இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் தனிநபா்களுக்கும், அறநிலையத் துறைக்கும் இடையிலானது. இந்த முறைகேடு தொடா்பான உரிமையியல் வழக்கில் அறநிலையத் துறை தோல்வியடைந்தது. இதையடுத்து, உயா்நீதிமன்ற உத்தரவின்படி பத்திரப் பதிவு நடைபெற்றது. இதில் சாா் பதிவாளரின் பங்கு என்பது மிகக் குறைவே.

இருப்பினும், உரிய காரணம் இல்லாமல் என்னை வழக்கில் சோ்த்து கைது செய்தனா். எனவே, எனக்கு பிணை வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இதேபோல, பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட வெள்ளைத்துரை, சேதுபதி ஆகியோரும் தங்களுக்கு பிணை வழங்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, உயா்நீதிமன்ற நீதிபதி முரளிசங்கா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments