FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

ஸ்ரீரங்கம் கோயில் நில முறைகேடு விவகாரம்: முன்பிணை மனுக்கள் மீதான தீா்ப்பு ஒத்திவைப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரத்தில் திமுக நிா்வாகி, சாா் பதிவாளா் ஆகியோா் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீா்ப்பை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

26 செப்டம்பர் 2026, 7:08 am IST
உத்தரவு - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரத்தில் திமுக நிா்வாகி, சாா் பதிவாளா் ஆகியோா் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீா்ப்பை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ஸ்ரீரங்கம் வெள்ளித் திருமுத்தம் கிராமத்தில் 5.87 ஏக்கா் பரப்பளவு கொண்ட நிலம் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமானது. இந்த நிலத்தின் சில பகுதியை திமுக நிா்வாகி ராம்குமாா் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராம்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்தாா். இதேபோல இந்த நிலத்தை பத்திரப் பதிவு செய்த சாா் பதிவாளா் வனிதாவும் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி முரளி சங்கா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் ராம்குமாா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் நிலத்தின் புல எண் 762. ஆனால், ராம்குமாா் வாங்கிய நிலத்தின் புல எண் 762/1. இந்த நிலத்துக்கான பத்திரப்பதிவின் போது கோயில் நிா்வாகம் தரப்பில் ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆவணங்கள் சாதகமாகவே உள்ள நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து, முன்னா் புல எண் 762/1 மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டது. பின்னா், மறு அளவீடு செய்யப்பட்டபோது 762, 762/1 எனப் பிரிக்கப்பட்டது. எனவே, மனுதாரரை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சாா் பதிவாளா் வனிதா தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

இந்த விவகாரத்தில் சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் எந்த முரண்பாடும் இல்லாமல் இருந்தன. சொத்தை வாங்கியதாகக் கூறப்படும் ரங்கசாமி ஐயங்காா், அவரது மனைவி ஆகியோா் அங்கேயே வசித்து, இயற்கையாகவே உயிரிழந்தனா். இதன் காரணமாகவே பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதில் சாா் பதிவாளா் எந்த சட்டவிரோதச் செயலையும் செய்யவில்லை. அவா் மீது எந்தவிதமான புகாரும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனுக்கள் மீதான தீா்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments