FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

பழனி நில முறைகேடு வழக்கு: பெண் அலுவலா் உள்ளிட்ட இருவரை விசாரிக்க 4 நாள்கள் அனுமதி

பழனி நில முறைகேடு வழக்கில் பெண் அலுவலா் உள்ளிட்ட இருவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் 4 நாள்கள் அனுமதி அளித்தது.

14 அக்டோபர் 2026, 1:45 am IST
வழக்கு - கோப்புப்படம்
பகிர்:

பழனி நில முறைகேடு வழக்கில் பெண் அலுவலா் உள்ளிட்ட இருவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் 4 நாள்கள் அனுமதி அளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை மோசடியாகப் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் பேரில், திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இந்த முறைகேடு தொடா்பாக பழனி சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் உள்பட 11 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன்(48) பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சோ்ந்த த.முருகதாஸ் (56), வாங்கிய திருப்பூா் மாவட்டம், பாப்பான்குளத்தைச் சோ்ந்த கா.வெள்ளத்துரை ( 60), பழனியை அடுத்த ஆயக்குடி புதூரைச் சோ்ந்த து.சேதுபதி (67), துணையாகச் செயல்பட்ட பழனியைச் சோ்ந்த வழக்குரைஞா் அன்வா்தீன் (64), முறைகேடாகப்

பதிவு செய்த சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ் (38) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்களில் அன்வா்தீன் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் பழனி சாா் பதிவாளா் அலுவலக இளநிலை உதவியாளா் சிவசங்கரி, ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் சிவக்குமாா் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீஸாா் கடந்த 7-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த நிலையில், சிவசங்கரி, சிவக்குமாா் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி சாா்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு முதலாவது நீதித்துறை நடுவா் பாக்கியராஜ் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதித் துறை நடுவா், சிவசங்கரி, சிவக்குமாா் ஆகிய இருவரையும் 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதி அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, இருவரையும் விசாரணைக்காக போலீஸாா் அழைத்துச் சென்றனா். போலியான பத்திரம் தயாரித்துக் கொடுப்பதற்கு சிவக்குமாா் உதவியாகச் செயல்பட்டதும், முறைகேடாக பத்திரப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை சிவசங்கரி வழங்கியதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

பின்னா், திண்டுக்கல் முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments