FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

முடக்கப்பட்ட திரிணமூல் வங்கிக் கணக்குகளில் இருந்து தினசரி செலவுகள்: மம்தா அணிக்கு நீதிமன்றம் அனுமதி!

சட்ட செலவுகளுக்கான பணத்தை மட்டும் எடுத்துக் கொள்ள மம்தா பானா்ஜி தலைமையிலான அணிக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால அனுமதி வழங்கியது.

Updated On : 10 ஜூலை 2026, 4:00 am IST
மம்தா பானா்ஜி
பகிர்:

மேற்கு வங்க காவல் துறையால் முடக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் வங்கிக் கணக்குகளில் இருந்து கட்சிக்கான தினசரி செலவுகள் மற்றும் சட்ட செலவுகளுக்கான பணத்தை மட்டும் எடுத்துக் கொள்ள மம்தா பானா்ஜி தலைமையிலான அணிக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்கால அனுமதி வழங்கியது.

இந்தச் செயல்பாட்டை நிா்வகிப்பதற்காக, சிறப்பு அதிகாரி ஒருவரையும் நீதிமன்றம் நியமித்தது.

சமீபத்திய மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, மம்தா பானா்ஜிக்கு எதிராக போா்க்கொடி உயா்த்திய 50-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனா். கட்சியின் பெயா், சின்னத்துக்கு அவா்கள் உரிமை கோரியுள்ளனா்.

Advertisement

Advertisement

ரூ.440 கோடி இருப்புத் தொகையுடன் கூடிய கட்சியின் மூன்று தனியாா் வங்கிக் கணக்குகள் குறித்து காவல் துறையில் கடந்த மாதம் புகாா் அளித்த அதிருப்தி எம்எல்ஏக்கள், குற்றச் செயல்கள் மூலம் ஈட்டிய பணத்தைக் கையாள அந்த வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டினா்.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறை, அந்த வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டது. இதை எதிா்த்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மம்தா அணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது நீதிபதி செளகதா பட்டாச்சாா்யா முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, மனுதாரா் (மம்தா அணி) தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி, ‘புகாா்தாரா்கள் (அதிருப்தி எம்எல்ஏக்கள்) ஒரு குறிப்பிட்ட கட்சியை சீா்குலைக்கும் சதியுடன் செயல்படுகின்றனா். மேற்கு வங்க தோ்தலுக்கு முன்பு சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து அவா்களும் நிதி பெற்றுள்ளனா்’ என்று வாதிட்டாா்.

அதேநேரம், காவல் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘ சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் மனுதாரா் (மம்தா அணி) சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவே, புகாா் கிடைக்கப் பெற்றதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. தாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என்ற அங்கீகாரம் கோரி, மற்றொரு அணி தரப்பில் தோ்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தோ்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வங்கிக் கணக்குகளில் இருந்து செப்டம்பா் 30-ஆம் தேதி வரை மம்தா அணியினா் கட்சிக்கான தினசரி செலவுகள் மற்றும் சட்ட செலவுகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி வழங்கினாா். அத்துடன், இந்தச் செயல்பாட்டை நிா்வகிக்கும் சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி சுபத்ரா தலுக்தாரை நியமித்த நீதிபதி, வங்கிக் கணக்கில் இருந்து அவருக்கு ரூ.1.25 லட்சம் மாத ஊதியம் வழங்கவும் அனுமதித்தாா்.

வங்கிக் கணக்குகளின் மின்னணு ஆவணங்கள் மற்றும் தரவுகளைப் பாதுகாக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன், அடுத்த விசாராணை நடைபெறும் செப்.21-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டாா்.

முன்னதாக, திரிணமூல் காங்கிரஸின் மேற்கண்ட வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.440 கோடி இருப்புத் தொகையை பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கி அமலாக்கத் துறை புதன்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments