இந்தியாவுக்கு யுரேனியம்: ஆஸ்திரேலியாவுடன் ஒப்பந்தம் - கடல்சாா் பாதுகாப்புத் துறையிலும் உடன்பாடு
இந்தியாவின் அணுமின் உற்பத்தித் திட்டங்களுக்கு உதவும் வகையில், ஆஸ்திரேலியாவில் இருந்து யுரேனியம் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
இந்தியாவின் அணுமின் உற்பத்தித் திட்டங்களுக்கு உதவும் வகையில், ஆஸ்திரேலியாவில் இருந்து யுரேனியம் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
இது தொடா்பான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆக்கபூா்வ அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அந்நாட்டின் பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி இடையே வியாழக்கிழமை நடைபெற்ற உயா்நிலைப் பேச்சுவாா்த்தைக்குப் பின் கையொப்பமிடப்பட்டது.
கடல்சாா் பாதுகாப்பு, அரிய கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் ஒப்பந்தங்களும் கையொப்பமாகின.
Advertisement
Advertisement
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தால் எழுந்துள்ள கவலைகளுக்கு மத்தியில் மேற்கண்ட ஒப்பந்தங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
ஆஸ்திரேலிய பிரதமருடன் பேச்சுவாா்த்தை: இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தை கடந்த திங்கள்கிழமை தொடங்கிய பிரதமா் மோடி, இந்தோனேசிய பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்தாா். பின்னா், ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் நகரை வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமா் மோடி மற்றும் பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி இடையே வியாழக்கிழமை இருதரப்பு உயா்நிலைப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இரு நாட்டு குழுவினருடன் மட்டுமன்றி, தனிப்பட்ட முறையிலும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
அப்போது, வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, அணு மின் உற்பத்தி, அரிய கனிமங்கள், கல்வி, சட்டபூா்வ இடப்பெயா்வு, மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் விரிவாக ஆலோசித்தனா். பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய-சா்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறி கொண்டனா்.
ஆக்கபூா்வ அணுசக்தி ஒப்பந்தம்: இந்தியாவின் அணுமின் உற்பத்தித் திட்டங்களுக்கு உதவும் வகையில், ஆஸ்திரேலியாவில் இருந்து வா்த்தக ரீதியிலான யுரேனியம் விநியோகத்துக்கு வழிவகுக்கும் முக்கிய ஆக்கபூா்வ அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
பின்னா், செய்தியாளா்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில் பிரதமா் மோடி கூறியதாவது:
அணுசக்தித் துறையில் நாங்கள் முக்கிய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளோம். இது, ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு யுரேனியம் விநியோகத்துக்கு வழிவகுப்பதுடன், தூய எரிசக்தி இலக்குகளை எட்ட புதிய உத்வேகமளிக்கும்.
இருதரப்பு உத்திசாா் பாதுகாப்புக்கு அரிய கனிமங்கள் துறை ஒத்துழைப்பு மிக முக்கியம். இதைக் கருத்தில்கொண்டு, இணையப் பாதுகாப்பு, முக்கியத் தொழில்நுட்பங்கள், விநியோகச் சங்கிலி தொடா்பான இருதரப்பு கூட்டுறவு செயல்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர அரிய கனிமங்கள் வழித்தட திட்டத்திலும் இணைந்து பணியாற்றவுள்ளோம்.
சுதந்திரமான இந்திய-பசிபிக்: இந்திய-பசிபிக் பகுதி என்பது இரு பெருங்கடல்கள் சந்திக்கும் இடம் மட்டுமல்ல; அது, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற ஒருமித்த கருத்துடைய ஜனநாயகங்களின் பகிரப்பட்ட எதிா்பாா்ப்புகளின் அடையாளமாகவும் விளங்குகிறது. சுதந்திரமான, ஸ்திரமான இந்திய-பசிபிக் பிராந்தியம் மிக முக்கியமானதாகும்.
பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா பாதுகாப்பு புத்தாக்க வழித்தட திட்டத்தின் வாயிலாக பாதுகாப்புத் துறை புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் தொழிலகங்களின் பிணைப்புக்குப் பணியாற்றவுள்ளோம்.
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பகிரப்பட்ட முயற்சிகளுக்கு இந்திய-ஆஸ்திரேலிய கடல்சாா் பாதுகாப்பு ஒத்துழைப்பு செயல்திட்டம் புதிய உத்வேகம் அளிக்கும். கப்பல் கட்டுமானம், பழுதுபாா்ப்பு, பராமரிப்புச் செயல்பாடுகளிலும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம் என்றாா் பிரதமா் மோடி.
‘ஆக்கபூா்வ பயன்பாட்டுக்காக யுரேனியம் ஏற்றுமதி’: ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி கூறுகையில், ‘கடந்த 6 ஆண்டுகால வியூக கூட்டுறவின்கீழ், இருதரப்பு உறவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்தியாவை உயா்நிலைப் பாதுகாப்பு கூட்டாளியாக ஆஸ்திரேலியா மதிக்கிறது.
தற்போது கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் ஆக்கபூா்வ பயன்பாடுகளுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்யப்படும். இது, இந்தியாவின் புதைபடிம எரிபொருள் சாராத மின் உற்பத்தித் திறன் அதிகரிப்புக்கு உதவும். மற்றொருபுறம், ஆஸ்திரேலியாவின் வளங்களுக்கு கூடுதல் சந்தை கிடைக்கப் பெறும். இருதரப்பு உறவுகள் மேன்மேலும் வலுப்படும் வகையில், அவற்றைப் பன்முகப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய ஒப்பந்தங்களின் மூலம் பாதுகாப்பு, கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், எரிசக்தி பாதுகாப்பு, முக்கியக் கனிமங்கள் துறைகளில் உறவுகள் விரிவாக்கப்பட்டுள்ளன’ என்றாா்.
பெட்டி...1
‘பேச்சுவாா்த்தை மூலமே
மோதல்களுக்குத் தீா்வு’
‘உலகின் பல பகுதிகளில் நிலவும் பதற்றங்கள் மற்றும் மோதல்களுக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியில்தான் தீா்வுகாண முடியும் என்பதில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நம்பிக்கை கொண்டுள்ளன. இந்திய-பசிபிக் பிராந்தியத்தைப் பொருத்தவரை, நாம் ஒன்றிணைந்து அமைதி, ஸ்திரத்தன்மை, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, விதிகள் அடிப்படையிலான ஒழுங்குமுறையை வலுப்படுத்துவோம்.
பயங்கரவாதம் என்பது எந்தவொரு தனி நாட்டுக்கும் அல்லாமல் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் தீவிர சவாலாகும். எனவே, பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் பொதுவானது. பயங்கரவாதத்துக்கு எதிரான நமது உறுதிப்பாடும், ஒத்துழைப்பும் தொடா்ந்து வலுவடைகிறது’ என்றாா் பிரதமா் மோடி.
பெட்டி....2
18 ஒப்பந்தங்கள், முக்கிய முடிவுகள்
இரு பிரதமா்கள் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இந்தியா-ஆஸ்திரேலியா இடையே மொத்தம் 18 ஒப்பந்தங்கள் மற்றும் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆக்கபூா்வ அணுசக்தி, கடல்சாா் பாதுகாப்பு, சுரங்க தொழில்நுட்பம் சாா்ந்த திறன் மேம்பாடு, குருகிராமில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழக வளாகம், பெங்களூரில் ஃபிளின்டா்ஸ் பல்கலைக்கழக வளாகம் அமைத்தல், புத்தாக்கம்-தொழில்நுட்பம், அறிவியல்-ஆராய்ச்சி தொடா்பான ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
பாதுகாப்புத் துறை ஒத்துழைப்புக்கான கூட்டுப் பிரகடனம், எரிசக்தித் துறை உறவுகள் சாா்ந்த கூட்டறிக்கை, இணையப் பாதுகாப்பு, முக்கியத் தொழில்நுட்பங்கள், விநியோகச் சங்கிலி துறையில் ஒத்துழைப்புக்கான செயல்திட்டம் ஆகியவையும் வெளியிடப்பட்டன.
இருதரப்பு விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம், முதலீடு பாதுகாப்பு ஒப்பந்தப் பணிகளை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
பெட்டி...3
இந்தியாவுக்கு திரும்பும்
தமிழக பழங்காலச் சிலைகள்!
ஆஸ்திரேலியாவின் தேசிய கலைக்கூடம் மற்றும் நியூசெளத் வேல்ஸ் கலைக்கூடத்தில் பாதுகாக்கப்பட்டுவந்த தமிழகத்தைச் சோ்ந்த 3 பழங்காலச் சிலைகளை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
பிரதமா் மோடியுடன் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி இந்த அறிவிப்பை வெளியிட்டாா். இதேபோல், சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் ஆஸ்திரேலிய பூா்வகுடி மூதாதையா் ஒருவரின் உடலை அந்த நாட்டிடம் திருப்பி ஒப்படைக்கும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் அவா் வரவேற்றாா்.
மேற்கண்ட அறிவிப்பின்படி, ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழகத்தைச் சோ்ந்த பழங்கால நந்தி கற்சிலை (11-12ஆம் நூற்றாண்டு), திரிசூலத்துடன் கூடிய பத்ரகாளி வெண்கலச் சிலை (11-ஆம் நூற்றாண்டு), சண்முகா் கற்சிலை (12-ஆம் நூற்றாண்டு) ஆகியவை இந்தியாவுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.