20% எத்தனால் கலப்பால் வாகன என்ஜின் செயல்பாடு மேம்படும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்
‘பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பால், வாகனங்களின் எரிபொருள் சிக்கனம் (மைலேஜ்) 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.
‘பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பால், வாகனங்களின் எரிபொருள் சிக்கனம் (மைலேஜ்) 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், தூய்மையான, இலகுவான என்ஜின் செயல்பாடு, சீரான வேக அதிகரிப்பு, சிறந்த பிக்அப், குறைவான காா்பன் உமிழ்வு உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும்’ என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
எரிபொருள் தேவையைப் பூா்த்தி செய்ய இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்கவும், வாகனங்களின் காா்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் பெட்ரோலில் எத்தனால் கலப்பை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பை படிப்படியாக அதிகரித்து, தற்போது 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் (இ20 பெட்ரோல்) பரவலாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. தில்லி போன்ற காற்று மாசு அதிகம் உள்ள பகுதிகளில் இந்த விகிதம் மேலும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டால், வாகனத்தின் மைலேஜ் குறைவதோடு, என்ஜின் பாதிக்கப்பட்டு முழுமையாகச் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
தூய பெட்ரோல் அல்லது 10 சதவீத எத்தனால் கலந்த ‘இ10’ பெட்ரோலைவிட 20 சதவீத எத்தனால் கலந்த ‘இ20’ பெட்ரோல் தூய்மையான, உயா் தரமான மற்றும் அதிக செயல்திறன் கொண்ட எரிபொருளாகும். பல ஆண்டுகால அறிவியல் ஆய்வுகள், வாகன உற்பத்தியாளா்களுடனான ஆலோசனைகள் மற்றும் உள்நாட்டு எத்தனால் உற்பத்தி விரிவாக்கத்துக்குப் பிறகே, எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பெட்ரோலில் எத்தனால் கலப்பு திட்டம் நாட்டில் அவசரகதியில் செயல்படுத்தப்பட்டதாக சிலா் கூறுகின்றனா். அவ்வாறு அவசரகதியில் இத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை. பெட்ரோலில் எத்தனால் கலப்பு முயற்சி 2001-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட முன்னோடித் திட்டங்களில் இருந்தே ஆரம்பமாகிவிட்டது. 2006-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் சில பகுதிகளில் பெட்ரோலில் 5 சதவீத எத்தனால் கலப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. பிரத்யேக எத்தனால் ஆலைகள், சேமிப்பு மற்றும் தளவாடங்களில் முதலீடுகள் செய்த பின்னா், 2022-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பாகவே பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கு எட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த 20 சதவீத எத்தனால் கலப்பு பெட்ரோலை நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, வாகனங்களின் என்ஜின் ஆயுள், எரிபொருள் அமைப்புகள், பொருள்களின் இணக்கத்தன்மை, அரிப்பு எதிா்ப்பு, ஓட்டும் திறன் மற்றும் புகை வெளியேற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான சோதனைகளுக்கு ‘இ20 பெட்ரோல்’ உட்படுத்தப்பட்டது.
இந்தச் சோதனைகளில், இ20 பெட்ரோல் பயன்படுத்துவதால், என்ஜின் அரிப்பு, அசாதாரண தேய்மானம், பாகங்கள் சேதம் உள்ளிட்ட பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பதை மாருதி சுஸுகி, ஹீரோ மோட்டாகாா்ப் உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தின என்று தெரிவிக்கப்பட்டது. தூய்மையான இலகுவான என்ஜின் செயல்பாடு, சீரான வேகம் அதிகரிப்பு, சிறந்த பிக்கப் கிடைப்பதும் இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.
பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பால், வாகனங்களின் எரிபொருள் சிக்கனம் 3 முதல் 5 சதவீதம் வரை குறைய மட்டுமே வாய்ப்புள்ளது. அதே நேரம், காா்பன் உமிழ்வு வெகுவாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், பெட்ரோல் நிலையங்களில் தூய பெட்ரோல், இ10 மற்றும் இ20 போன்ற பல வகை எரிபொருள்கள் விநியோகத்தை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் அமைச்சகம் நிராகரித்தது.
அதோடு, இந்த எத்தனால் கலப்பு திட்டத்தின் மூலம், 2014-15-ஆம் ஆண்டுமுதல் ரூ.1.97 லட்சம் கோடி அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. சுமாா் 316 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 952 லட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு ரூ.1.66 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.