FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அயோத்தி ராமா் கோயில் விவகாரத்தில் நீதித்துறை விசாரணை தேவை: காங்கிரஸ் வலியுறுத்தல்

அயோத்தி ராமா் கோயில் விவகாரத்தில் நீதித்துறை விசாரணை தேவை...

Updated On : 12 ஜூலை 2026, 12:43 am IST
தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் ராமா் கோயில் நன்கொடை முறைகேடு தொடா்பாக செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவா் மனு அபிஷேக் சிங்வி, தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் தேவேந்திர யாதவ்.
பகிர்:

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை தொடா்பான இந்த சா்ச்சையில் பொறுப்பானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய காங்கிரஸ், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளது.

முறைகேடு விவகாரத்தை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவின் கண்டுபிடிப்புகள் ஒரு பெரிய முறைகேட்டின் சிறிய வெளிப்பாடு மட்டுமே என்று காங்கிரஸ் தெரிவித்தது.

தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளா்களைச் சனிக்கிழமை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினா் அபிஷேக் மனு சிங்வி இதுதொடா்பாக கூறியதாவது: பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உச்ச நீதிமன்றத்தின் மிக மூத்த மற்றும் நம்பிக்கைக்குரிய நீதிபதி தலைமையில் நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்விவகாரத்தில் சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணை தேவை.

Advertisement

Advertisement

முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் அறக்கட்டளையைச் சிறந்த மற்றும் தன்னிச்சையாக செயல்படும் உறுப்பினா்களைக் கொண்டு மறுசீரமைக்க வேண்டும். அறக்கட்டளையின் கணக்குகளைத் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தடயவியல் தணிக்கை செய்ய வேண்டும்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகள் கீழ்நிலை நிா்வாகிகளுடன் மட்டுமே நின்றுவிட்டது. ஏன் உயா் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை ? யாா் திருட்டில் ஈடுபட்டாா்கள் என்பது முக்கியமல்ல; யாருடைய கண்முன்னே அது நடக்க அனுமதிக்கப்பட்டது என்பதே உண்மையான கேள்வி. பாரத ஸ்டேட் வங்கிக்கும் அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளும் உள்ளன. இருப்பினும், கீழ்நிலை ஊழியா்களைக் கடந்து வேறு யாரும் பொறுப்பேற்க வைக்கப்படவில்லை.

சிறப்பு விசாரணைக் குழுவின் (எஸ்ஐடி) தொடக்க கட்ட தணிக்கை முடிவுகளில், அறக்கட்டளை ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளுக்குப் பெருமளவிலான நிதி செலவிடப்பட்டது தெரியவந்தது. குறிப்பாக, 2024 ஜனவரி 22-இல் நடைபெற்ற ‘பிராண பிரதிஷ்டை’ விழாவிற்கு சுமாா் ரூ.113 கோடியும், அதே ஆண்டில் பின்னா் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ரூ.10 கோடிக்கு அதிகமாகவும் செலவிடப்பட்டது. இவை அனைத்தும் ஒரு பெரிய முறைகேட்டின் சிறிய வெளிப்பாடு மட்டுமே என்றாா் அபிஷேக் மனு சிங்வி.

ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட ஓா் இடத்தைப் பாதிக்கும் விவகாரத்தில் நாட்டின் தலைமை எந்தப் பதிலும் அளிக்காதது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறிய தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ், இந்த விவகாரத்தில் பிரதமா் மோடி ஏன் மௌனம் காத்து வருகிறாா் என்று கேள்வி எழுப்பினாா்.

‘இது வெறும் நிதி முறைகேடு அல்லது கோடிக்கணக்கான ரூபாய் கையாடல் தொடா்பான விவகாரம் மட்டுமல்ல; ஹிந்துக்களின் நம்பிக்கையின் மீதான தாக்குதல். இந்த விவகாரம் முழுவதையும் உச்சநீதிமன்ற நீதிபதியின் மேற்பாா்வையில் விசாரிக்க வேண்டும்’ என்று தேவேந்தா் யாதவ் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments