FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாடகி ஜானகி மறைவு: 5 மாநில முதல்வர்கள் இரங்கல்!

பாடகி ஜானகி மறைவுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் கர்நாடக மாநில முதல்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Updated On : 11 ஜூலை 2026, 10:56 pm IST
பகிர்:

பாடகி ஜானகி மறைவுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் கர்நாடக முதல்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியத் திரையிசையில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்தவர் எஸ். ஜானகி (88).

வயது மூப்பு காரணமாக சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்த அவர், இன்று உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்களிடம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

அவரது மறைவுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் கர்நாடக முதல்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட பதிவில், “இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர்.

பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.

அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்ட பதிவில், “தென்னிந்தியத் திரையுலக இசை ரசிகர்களின் இதயங்களில் ஜானகி தனது இனிமையான குரலால் நீங்காத இடம்பிடித்து முத்திரை படைத்துள்ளார் ஜானகி.

அவர் தெலுங்கு மொழி பேசுபவர் தெலுங்கு மக்கள் பெருமைக்குரிய விஷயம்.

அவரது மறைவு, இந்தியத் திரையுலகிற்கு மட்டுமல்ல, கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு” என்று அவர் தெரிவித்தார்.

கேரள முதல்வர் வெளியிட்ட பதிவில், “தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்ட, புகழ்பெற்ற பாடகி எஸ். ஜானகி அம்மாவின் மறைவு மிகுவும் வருத்தமளிக்கிறது.

அவர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது ஆயிரக்கணக்கான காலத்தால் அழியாத மெல்லிசைப் பாடல்கள் என்றென்றும் நம்மிடம் நிலைத்திருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது இரங்கல் பதிவில், “தென்னிந்தியாவின் அன்புக்குரிய நைட்டிங்கேல் என அழைக்கப்பட்ட பாடகி ஜானகி அம்மா அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது.

தெலுங்கு மண்ணின் மகளான அவர், அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈடு இணையற்ற இசைப் பாரம்பரியத்தின் மூலம், காலத்தால் அழியாத குரலால் அனைத்துத் தலைமுறைகளையும் தொட்டார்.

இந்திய இசைக்கு மகத்தான பங்காற்றிய அவரது பங்களிப்பு என்றென்றும் போற்றப்படும். அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் இசைத்துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் தனது இரங்கல் பதிவில், “ ஜானகி அம்மாவின் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

17 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை தனது இனிமையான குரலால் பாடிய அவரது மறைவு, இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. இசையைத் தன் வாழ்க்கையாகக் கொண்ட ஜானகி அம்மா, தனது பாடல்களின் மூலம் இசை ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காமல் நிலைத்திருப்பார்.

அவரது ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ள இறைவன் வலிமையைத் தரட்டும். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

summary

Passing of singer Janaki: Chief Ministers of 5 states offer condolences!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments