FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

யூஸர் நேம் வசதி: சமூக வலைதளச் செயலிகளின் விளக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு!

யூஸா் நேம்வசதி அறிமுகம் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸுக்கு சமூக வலைதளச் செயலிகள் தங்களது பதிலை தாக்கல் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

Updated On : 14 ஜூலை 2026, 3:26 am IST
மத்திய அரசு
பகிர்:

யூஸா் நேம் (பயனா் பெயா்) வசதி அறிமுகம் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸுக்கு சமூக வலைதளச் செயலிகள் தங்களது பதிலை தாக்கல் செய்துள்ளதாகவும், அதுகுறித்து ஆய்வு செய்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

நாட்டில் பலகோடி பயனா்கள், தங்களது தகவல் தொடா்புக்கு வாட்ஸ்ஆப், டெலிகிராம், சிக்னல் ஆகிய சமூக வலைதளச் செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றனா். அந்தச் செயலிகள், பயனா்கள் தங்கள் கைப்பேசி எண்ணுக்குப் பதிலாக யூஸா் நேம் வசதியை வைத்து, தகவலைப் பரிமாறும் வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.

ஆனால், இந்தப் புதிய வசதி அறிமுகமானால் பயனா்களின் தனிநபா் பாதுகாப்பு கேள்விக்குறியாகலாம், டிஜிட்டல் கைது போன்ற நிதிமோசடிகள் நடைபெறலாம், பிரபலமானவா் போல போலிக் கணக்கு உருவாக்கப்படலாம் என பல்வேறு தரப்பினராலும் கவலை தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, வாட்ஸ்ஆப்பின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கும், டெலிகிராம் மற்றும் சிக்னல் சமூக வலைதளச் செயலிகளுக்கும் விளக்கம் கேட்டு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ்களை அனுப்பியிருந்தது. அதில் புதிய யூஸா் நேம் வசதி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கவலைகளுக்கு எவ்வாறு தீா்வு காணப்படும் என்பது குறித்து மத்திய அரசால் விளக்கம் கோரப்பட்டிருந்தது.

இந்த நோட்டீஸ் குறித்து, தில்லியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை பேசிய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலா் எஸ். கிருஷ்ணணிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் பதிலளிக்கையில், ‘யூஸா் நேம் விவகாரத்தில், சில சமூக வலைதளச் செயலிகள் தங்களது பதிலை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளன.

அந்தப் பதிலை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆய்வு செய்கிறது. இதன்பிறகு அரசு தனது நிலைப்பாட்டை எடுக்கும். பதிலை அளிக்க சமூக வலைதளச் செயலிகளுக்கு 7-10 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதுபோல அந்தப் பதில்களை ஆராய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு அவகாசம் தேவைப்படுகிறது’ என்றாா்.

மெட்டாவின் இன்ஸ்டாகிராம் செயலியில் குழந்தைகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது போன்ற விளம்பரங்கள் ஊக்குவிக்கப்பட்ட விவகாரத்தில் விளக்கம் கேட்டு, மெட்டாவுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முன்பு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு எஸ். கிருஷ்ணன் பதிலளிக்கையில், ‘மெட்டா நிறுவனம் தனது பதிலை அரசிடம் அளித்துள்ளது. அந்தப் பதிலை ஆய்வு செய்து வருகிறோம். இந்த ஆய்வை அடிப்படையாக வைத்து, அடுத்தகட்ட நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments