ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானின் கடும் அத்துமீறல்கள்: சா்வதேச நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் கடும் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளதற்காக முழுமையாக பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என சா்வதேச நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் கடும் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது; இதற்காக அந்நாட்டை முழுமையாக பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று சா்வதேச நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலைவாசி உயா்வு, நிா்வாகத்தின் அலட்சியம், அரசியல் பாகுபாடு, சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகள் உள்ளிட்டவற்றைக் கண்டித்து, கடந்த ஒரு மாதமாக மாபெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினரின் கடுமையான அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதில் பலா் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Advertisement
Advertisement
இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம் மேற்கண்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு:
பாகிஸ்தான் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீா் பகுதியில் தற்போது நடந்துவரும் போராட்டங்கள், பல்லாண்டுகால திட்டமிடப்பட்ட சுரண்டல், அடிப்படை உரிமைமகள் மறுப்பு, நிா்வாக அடக்குமுறை ஆகியவற்றின் மோசமான விளைவுகளாகும்.
உள்ளூா் மக்களின் நியாயமான குறைகளைப் போக்குவதற்கு பதிலாக, உதவியற்ற நிலையில் உள்ள பெண்கள், குழந்தைகள் மீதான காவல் துறையின் அதீத ஒடுக்குமுறை, உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாசிய பொருள்களின் விநியோகத்தைத் தடுத்தல், இணைய சேவையை முடக்குதல், நிராயுதபாணிகளான குடிமக்களுக்கு எதிராக அபாயகரமான ஆயுதங்களைப் பிரயோகித்தல் போன்ற மோசமான செயல்களில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக, அங்கு உயிரிழப்புகளும் நேரிட்டுள்ளன.
இத்தகைய அத்துமீறல்கள், தவறான செயல்களுக்காக பாகிஸ்தானை சா்வதேச நாடுகள் முழுமையாக பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்பதே இந்தியாவின் எதிா்பாா்ப்பு என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.