FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தேசியப் பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்: மழைக்கால கூட்டத் தொடரில் மசோதா அறிமுகம்

தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு தடங்கல் ஏற்படுத்துவது அல்லது அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் வகையிலான சட்டத் திருத்த மசோதாவை வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

Updated On : 17 ஜூலை 2026, 2:07 am IST
கோப்புப் படம்
பகிர்:

தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு தடங்கல் ஏற்படுத்துவது அல்லது அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் வகையிலான சட்டத் திருத்த மசோதாவை வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு விழாக்களில் 6 சரணங்களுடன் கூடிய தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ முழுமையாகப் பாடப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவிட்டது. அதற்கான வழிகாட்டுதலையும் வெளியிட்டது. அதன்படி, அரசு விழாக்களில் மாநில பாடல்களை முதலில் பாடலாம். அதன்பின் வந்தே மாதரம் தேசியப் பாடலும், அதையடுத்து தேசிய கீதமும் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், வந்தே மாதரம் பாடலுக்கு தடங்கல் ஏற்படுத்துவது அல்லது அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் வகையில், ‘தேசிய கெளரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026’-ஐ, வரும் 20-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்து, நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

மக்களவைச் செயலகம் வியாழக்கிழமை வெளியிட்ட நாடாளுமன்ற அலுவல் குறிப்பில், இந்த மசோதா அறிமுகமும் பட்டியலிடப்பட்டுள்ளது. தேசிய கெளரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்கும் சட்டம் 1971-இல் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது.

மேலும், பிறப்பு மற்றும் இறப்புகளை தாமதமாகப் பதிவு செய்வதற்கான விதிகளை மேலும் கடுமையாக்கும் வகையில், பிறப்பு - இறப்பு பதிவுச் சட்டம் 1969-இன் பிரிவு 13(3)-இல் கடந்த 2023-இல் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் ‘பிறப்பு-இறப்பு பதிவு திருத்தச் சட்ட மசோதா 2026’ மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதுபோல, ‘வெளிநாட்டு பங்களிப்பு முறைப்படுத்துதல் திருத்தச் சட்ட மசோதா 2026’ மசோதாவும் நாடாளுமன்ற பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட அலுவல் குறிப்பில் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போதே இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்தித்த கேரளத்திலிருந்து இந்த மசோதாவுக்கு கடும் எதிா்ப்பு எழுந்ததைத் தொடா்ந்து, நாடாளுமன்ற பரிசீலனைக்கு அப்போது எடுத்துக்கொள்ளப்படவில்லை.

வெளிநாட்டு நிதியைப் பெறும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், அவற்றின் நிதிகளை நிா்வகிக்கவும் மத்திய அரசிற்கு கூடுதல் அதிகாரங்களை அளிக்க இந்த மசோதா வகை செய்கிறது.

வருமான வரி திருத்த மசோதா:

ரூபாயின் மீதான அழுத்தத்தைச் சமாளிப்பதற்காக வெளிநாட்டு மூலதனத்தை ஈா்க்கும் நோக்கில், அரசுப் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் மூலதன ஆதாயங்கள் மீதான வருமான வரியிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளா்களுக்கு அரசு விலக்கு அளித்துள்ளது. இதற்காக அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக வருமான வரி திருத்த மசோதாவை மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments