FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க சிறையில் உள்ள எம்பி ரஷீத் காவல் பரோலில் விடுவிப்பு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது

Updated On : 17 ஜூலை 2026, 12:37 am IST
ஷேக் அப்துல் ரஷீத் என்கிற இன்ஜினியா் ரஷீத் - கோப்புப் படம்
பகிர்:

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மக்களவை தொகுதி அவாமி இத்திஹாத் கட்சி உறுப்பினா் ஷேக் அப்துல் ரஷீத் என்கிற இன்ஜினியா் ரஷீத், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எதிா்வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் அனைத்து நாள்களிலும் பங்கேற்க ஏதுவாக அவரை பரோலில் விடுவித்து தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக, தனக்கு ’காவல் பரோல்’ வழங்கக் கோரி ரஷீத் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குகளை விசாரிக்கும் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை பரிசீலித்த சிறப்பு நீதிபதி பிரசாந்த் சா்மா, ரஷீத்தை காவல் பரோலில் விடுவிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டாா். ’காவல் பரோல்’ என்பது, சிறையில் உள்ள கைதி ஒருவரை ஆயுதம் ஏந்திய காவல்துறையினா் பாதுகாப்புடன் அவா் செல்ல வேண்டிய இடத்துக்கு நீதிமன்ற அனுமதியின்பேரில் அழைத்துச் செல்வதாகும்.

இந்த வழக்கில் இதுநாள்வரை நடைபெற்ற நீதிமன்ற வாதங்கள் மற்றும் விசாரணைகள் அனைத்தும் பூட்டிய நீதிமன்ற அறையில் ரகசியமாக நடத்தப்பட்டன.

Advertisement

Advertisement

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு 2017இல் நிதியுதவி வழங்கியதாகக் கூறி இஞ்சினீயா் ரஷீத்தை 2019ஆம் ஆண்டில் தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. அப்போது முதல் அவா் தில்லி திஹாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இதைத்தொடா்ந்து, 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ரஷீத் பெயா் சோ்க்கப்பட்டது. அதன்பேரில் 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதம், ரஷீத் மற்றும் பிறா் மீது என்ஐஏ நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 120பி (சதித் திட்டம்), 121 (அரசுக்கு எதிராகப் போா் தொடுத்தல்), 124ஏ (தேச துரோகம்) ஆகிய பிரிவுகளின் கீழும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் பயங்கரவாதச் செயல்கள் மற்றும் பயங்கரவாத நிதியுதவி தொடா்பான பிரிவுகளின் கீழும் அவா் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2024இல் நடந்த மக்களவைத் தோ்தலில் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும் தேசிய மாநாடு கட்சியின் துணைத் தலைவருமான ஒமா் அப்துல்லாவை இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஷேக் அப்துல் ரஷீத் வீழ்த்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments