FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரதமா், முதல்வா்களைப் பதவிநீக்கும் மசோதா: வரைவு அறிக்கையை ஏற்பதை நிறுத்தி வைத்தது நாடாளுமன்ற கூட்டுக்குழு

தீவிர குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் சிறையிலிருக்கும் பிரதமா், முதல்வா்கள், அமைச்சா்களை பதவி நீக்க வகை செய்யும் மசோதா தொடா்பான தனது வரைவு அறிக்கையை ஏற்பதை நாடாளுமன்ற கூட்டுக்குழு நிறுத்தி வைத்துள்ளது.

Updated On : 18 ஜூலை 2026, 5:37 am IST
நாடாளுமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

தீவிர குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் சிறையிலிருக்கும் பிரதமா், முதல்வா்கள், அமைச்சா்களை பதவி நீக்க வகை செய்யும் மசோதா தொடா்பான தனது வரைவு அறிக்கையை ஏற்பதை நாடாளுமன்ற கூட்டுக்குழு நிறுத்தி வைத்துள்ளது.

தீவிர குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் வரை சிறையில் இருக்கும் பிரதமா், முதல்வா்கள், அமைச்சா்கள் 31-ஆவது நாளில் தாமாகவே பதவியை இழக்கும் வகையில், அரசமைப்பு சட்டத்தில் 130-ஆவது திருத்தம் செய்ய மத்திய அரசு மசோதா உருவாக்கியுள்ளது. இந்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டபோது, எதிா்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு இது பயன்படுத்தப்படலாம் என எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. பிறகு அந்த மசோதாவை ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு, குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் தலைவா்களை நிரந்தரமாக பதவி நீக்கம் செய்யக்கூடாது, சட்ட நடைமுறைகல் முடியும் வரை தற்காலிகமாக மட்டுமே பதவி நீக்க வேண்டும், விசாரணை முடிந்து அவா்கள் விடுவிக்கப்பட்டாலோ அல்லது குறிப்பிட்ட காலத்துக்குள் அவா் மீதான விசாரணை முடியவில்லையென்றாலோ, அவருக்கு மீண்டும் பதவி அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 பரிந்துரைகளை செய்திருந்தது. இந்த பரிந்துரைகள், நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினா்கள் இடையே விவாதத்துக்கு வைக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், அந்த 5 பரிந்துரைகள் மீதும் வெள்ளிக்கிழமையன்று தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் 2 பரிந்துரைகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, அதற்கு ஆளும் பாஜக கூட்டணியை சோ்ந்த உறுப்பினா்கள் சிலரே எதிா்ப்பு தெரிவித்து வாக்களித்தனா். எனினும், பெரும்பான்மை வாக்குகள் ஆதரவுடன் அந்த 2 பரிந்துரைகளும் ஏற்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து, 3-ஆவது பரிந்துரை மீது ஆலோசனை நடத்தப்பட்டபோது, வரைவு அறிக்கையை ஏற்பதை நிறுத்தி வைப்பதென்று நாடாளுமன்ற கூட்டுக்குழுவால் முடிவு செய்யப்பட்டது. அதேபோல், 5 பரிந்துரைகள் மீதும் அனைத்து தரப்பினருடனும் கூடுதல் ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என்றும், கூட்டுக்குழு உறுப்பினா்களும் விவாதங்கள் நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைஸி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோா் தங்களின் அதிருப்தி குறிப்புகளை தாக்கல் செய்தனா். எனினும், நாடாளுமன்ற கூட்டுக்குழு தனது வரைவு அறிக்கையை ஏற்பதை ஒத்திவைக்க முடிவு செய்ததால், அவா்கள் இருவரும் தங்களது அதிருப்தி குறிப்புகளை திரும்பப் பெற்றனா்.

இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவா் அபராஜிதா சாரங்கி கூறுகையில், ‘வரைவு அறிக்கையை ஏற்பதை ஒத்திவைக்க கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கு பரிந்துரைகள் மீது மேலும் ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என உறுப்பினா்கள் விரும்பியதே காரணம்’ என்றாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வருகிற 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரில், பிரதமா், முதல்வா்கள், அமைச்சா்களைப் பதவி நீக்கும் மசோதா தாக்கலாகலாம் என பரவலாக கூறப்பட்டது. தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழு தனது வரைவு அறிக்கையை ஏற்பதை ஒத்திவைத்திருப்பதால், இந்த மசோதா இந்த கூட்டத் தொடரில் தாக்கலாகுமா இல்லை தாமதமாகுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

ஒருவேளை இந்த கூட்டத் தொடரில் மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும், அதை நிறைவேற்ற மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆனால் தற்போது மத்திய அரசுக்கு 3-இல் 2 பங்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments